பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 s 3

தான் அவளுக்குமுன் வெளியிடுவதும் உசிதமாகத் தோன்ற வில்லை. அவள் சொன்ன வரலாறு நிஜம் போலவும் தோன்றியது; வஞ்சகம் போலவும் தோன்றியது. தனக்குக் கடிதம் அனுப்பியுள்ள மனிதர்கள் உண்மையிலே தனக்கு அனுகூலம் செய்யவந்த மனிதர்களாக இருப்பார்களா, அப்படியிருந்தால், அவர்களை யார் அனுப்பி இருப்பார்கள் என்ற சந்தேகமும் தோன்றியது. தனக்கு உதவி செய்யக் கூடியவர்கள் ஷண்முகவடிவைத் தவிர வேறு எவரும் இல்லை. ஆகையால், அவளே அவர்களை அனுப்பியிருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. கடைசியாகத் தானும் அபிராமியும் ஒன்றாயிருந்த காலத்தில் தன்னைக் கண்டு தான் தூராகிர்தமான காரியம் செய்துவிட்டதாக நம்பி அந்த விசனத்தைச் சகிக்க மாட்டாமல் மயங்கிக் கீழே வீழ்ந்த அந்தப் பெண்மணி தன்னை வெறுத்து விலக்க வேண்டியதே ஒழுங்காயிருக்க அதை விட்டு மறுபடியும் தன்மீது இரக்கங் கொண்டு தன்னை விடுவிப்பதற்காக ஏற்பாடுகள் செய்ய மனிதரை அனுப்புவது அசம்பாவிதமாகத் தோன்றியது. ஒருவேளை, தன்மீது குற்றமில்லையென்றும், அபிராமி முதலியோர் தனது விஷயத்தில் வஞ்சகம் செய்து விட்டனர் என்றும், அவள் பின்னால் தெரிந்து கொண்டு தனது கெட்ட அபிப்பிராயம் மாறாமலேயே இருந்தும், தன்மீது கொண்ட அபாரமான அன்பினால் தூண்டப்பட்டவளாய்த் தனது தவறுகளை யெல்லாம் பாராட்டாமல் தன்னை விடுவிப்பதே முதன்மை யான கடமையென்று எண்ணி அந்த மனிதர்களை அனுப்பி இருப்பாளோ என்ற யோசனையும் தோன்றியது. எப்படி யிருந்தாலும், தான் கை மாட்டி எதையும் எழுதாமல் நிரம்பவும் ஜாக்கிரதையாக எழுத வேண்டும் என்ற நினைவோடு கலியாண சுந்தரம், தன்னிடமிருந்த எழுதப்படாத துண்டுக் கடிதத்தையும் பென்சிலையும் எடுத்து அதில் பின்வருமாறு எழுதலானான்:

வெளியிலுள்ள நண்பர்களுக்கு,