பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பூர்ணசந்திரோதயம்-4 தாதிகள் அவளது கருத்தை அறிந்த உடனே வந்து அவளது விருப்பத்தை நிறைவேற்றிப் போயினர்.

சயனத்திலிருந்து அடிக்கடி எழுந்து அங்குமிங்கும் உலாவி அருகிலிருந்த கிளிகள்முதலிய ஜிவஜெந்துக்களண்டை நெருங்கி அவைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொஞ்சுவதும் முத்தமிடுவதும் அன்பாகத்தடவிக் கொடுப்பதும் அவைகளுக்கு மழலை மொழிகள் கற்பிப்பதுமாகவே அந்த நளின சுந்தரி எப்போதும் காணப்பட்டாள். அவளைக் காணும்போதெல்லாம் அவ்விடத்திலிருந்த பஞ்சவர்ணக்கிளிகள் கூண்டைவிட்டு வெளிப்பட்டு அவளது கரத்திற்கு வந்துவிட வேண்டுமென்று கம்பிகளில் முட்டி மோதிக்கொண்டு மூர்த்தண்ணியமாகக் கடுமுயற்சி செய்தன. குயிலிணைகள் ஒரு புறத்தில் தங்களது தீங்குரல் அமுதைச் சொரிந்து கொண்டிருந்து, மோகனராகம் பாடி ஆனந்த நிருத்தனம் செய்துகொண்டிருந்தன. புஷ்பங்களி லிருந்து ஒழுகிய மதுவைப் பருகிச் செருக்கிய வண்டினங்கள் மேலே கூறப்பட்ட தெய்வகானத்திற்குச் சுருதி போட்டுக் கொண்டிருப்பதுபோல எப்போதும் மாதுரியமாக ரீங்காரம் செய்துகொண்டிருந்தன. ஜோடி ஜோடியாக ஆங்காங்கு காணப்பட்ட மணிப்புறாக்களுள் பெண் புறாக்கள் பிணங்கி ஒருபுறம் திரும்பி நிற்க, அதனதன் காதலரான ஆண் புறாக்கள் தத்தம் சிறகுகளை அழகாகவும் ஒய்யாரமாகவும் விரித்துத் தங்களது அழகைக் காட்டி குமுகுமு குமுகுமூ வென்று கும்காரம் செய்தபடி தத்தம் பெடைகளைச் சுற்றி வந்து நடனம் செய்து, கலவியின் ரகசியங்களையும் மகிமையையும் அவைகளுக்குப் போதித்து அவைகளைத் தமது வசப்படுத்த முயன்றுகொண்டிருந்தன. .

இன்னொரு பக்கத்திலிருந்த பஞ்சவர்ணக் கிளிகள் மனிதர் பேசுவதுபோல அழகாகப் பேசிக் கொஞ்சிக் கொண்டிருந்தன. பாரசீகத்து வெள்ளைக் கிளிகள் அன்னப் பறவைகள்போல அழகாக நிமிர்ந்து ஆச்சரிய மொழிகள் கூறிக் கொண்டிருந்தன.