பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பூர்ணசந்திரோதயம்-4 வேடனைக் கண்ட மான்போல மருண்டு நாற் புறங்களிலும் திரும்பிப் பார்த்தாள். மனிதர் யாரும் தென்படவில்லை. ஏதாவது ஒரு வீட்டின் திண்ணையில் ஏறி ஒளிந்து கொள்ளலாம் என்ற நினைவோடு அவள் பக்கத்திலிருந்த வீட்டுத் திண்ணைகளையெல்லாம் பார்த்து ஆராய்ச்சி செய்தாள். எந்தத் திண்ணையிலும் மறைவான இடமே காணப்படவில்லை. தனக்கு அருகில் ஏதாவது சந்து இருந்தால், அதற்குள் புகுந்து ஒளிந்து கொள்ளலாமென்ற நினைவோடு அவள் தனது திருஷ்டியை அங்குமிங்கும் திருப்பி, சுமார் ஐம்பது கஜ தூரத்திற்கு அப்பால் முன்பக்கத்தில் ஒரு சந்து இருந்ததைக் கண்டு, அதை நோக்கி விரைவாக நடக்கலானாள். நடந்தவள் இரண்டொரு நிமிஷ நேரத்தில் சந்தின் முடக்கை அடைந்தாள். அந்த சந்து ஐந்து அல்லது ஆறடிவிசாலமுடையதாய் நிரம்பவும் நெருக்கமானதாக இருந்தது, இரண்டு பக்கங்களிலும் வீடுகள் வரிசையாக இருந்தன. அவற்றின் முன்புறங்களிலும் நான்கு அல்லது ஐந்தடி அகலமுள்ள திண்ணைகள் இருந்தன. சந்தின் இருபுறங்களிலும் வீடுகள் ஆகாயத்தில் வெகுதூரம் வரையில் உயர்ந்திருந்தன. ஆதலால், சந்து முழுதும் இருளில் அடங்கிக் கிடந்தது. அத்தகைய இருளடர்ந்த சந்தின் தொடக்கத்தை அடைந்த நமது ஷண்முகவடிவு அதற்குள் நுழையுமுன், போலீசார் எவ்விடத்தில் இருக்கிறார்கள் என்பதை நிச்சயித்துக் கொள்ளவேண்டும் என்று நினைவைக் கொண்டவளாய், அவர்களது குரல் எவ்விடத்தில் இருந்து உண்டாகிறதென்று உற்றுக் கவனித்தாள். அவளிருந்த சந்திற்குச் சுமார் 20-கஜ தூரத்திற்கு முன்னாலிருந்த ஒரு சந்தில் அவர்களது குரல் கேட்டது. அவர்கள் ஒவ்வொரு சந்தாக நுழைந்து ஜனங்களை எச்சரித்துவிட்டு வருகிறார்களென்று நினைத்த ஷண்முகவடிவு, அவர்கள் தானிருந்த சந்திற்கு வந்தாலும் வருவார்கள் என்று நினைத்தவளாய், அவர்கள் வருவதற்குள்தான் அந்தச்சந்திற்குள் நுழைந்து அதன் கடைசியை அடைந்து அப்பால் போய்விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவளாய், சந்திற்குள் இரண்டோரடி எடுத்து வைத்தாள்.