பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 265 உத்தேசிக்கிறீர்கள்? நமக்கு அநாமதேயக் கடிதம் எழுதிய மனிதனுக்கு, நாம் வந்திருக்கும் சங்கதி எப்படிதெரியும்? அவன் இனி நமக்கு எப்படி யோசனை சொல்லப் போகிறான்?

இளவரசர் :- நான் பூர்ணசந்திரோதயத்துக்குப் படித்துக் காட்டிய கடிதத்துக்குப் பிறகு அதே மனிதன் எனக்கு இன்னொரு கடிதம் அனுப்பினான். அதன் சாராம்சத்தை நான் உனக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். அந்தக்கடிதத்தில் அவன் ஒரு சங்கதி எழுதியிருக்கிறான். அதாவது, நாம் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தவுடனே, ஒரு கடிதத்தில் நாம் இங்கே வந்திருப்பதாகவும் இன்ன இடத்தில் இறங்கியிருப்பதாகவும் எழுதி, அந்தக் கடிதத்தை மடித்து, இந்த நகரத்தின் கீழராஜ வீதியில் 530வது இலக்கமுள்ள வீட்டின் ஜன்னலுக்குள் போட்டுவிட்டுப் போனால், அந்தக் கடிதம் தனக்கு வந்து சேர்ந்து விடுமென்றும், தான் உடனே கடிதம் எழுதி அப்போதைக்கு அப்போது நடக்கும் சங்கதிகளைத் தெரிவிப்பதாகவும், நாம் அதன்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும் எழுதியிருக்கிறான். ஆகையால், நீ ஒரு காரியம் செய். அவனுடைய கடிதத்தில் குறிக்கப்பட்ட விஷயங்களின் உண்மையை அறிந்துகொள்ள தஞ்சையிலி ருந்து இருவர் புறப்பட்டு வந்து இந்தச் சத்திரத்தில் இந்த அறையில் இறங்கியிருப்பதாக எழுதி இப்போதே எடுத்துக் கொண்டுபோய் அவன் குறித்துள்ள வீட்டின் ஜன்னலுக்குள் போட்டுவிட்டு வந்து சேர். வரும்போது அந்த வீடு யாருடையதென்றும், அங்கே யார் இருக்கிறார்கள் என்றும் விசாரித்துத் தெரிந்து கொண்டுவா - என்றார்.

அதைக் கேட்ட சாமளராவ் உடனே ஒரு காகிதம் எடுத்து இளவரசரது சொற்படி அதில் சங்கதி எழுதி, அதை அவருக்குப் படித்துக் காட்டியபிறகு மடித்து எடுத்துக் கொண்டு அவ் விடத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் போய்விட்டான். போனவன் அரைநாழிகை சாவகாசத்தில் மறுபடி திரும்பி வந்து சேர்ந்தான். அவனைக் கண்ட இளவரசர் ஆவலோடு அவனது