பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 297 ஆசைப்பட்டதாகச் சொல்வது குதர்க்கமாக இருக்கிறதேயன்றி வேறல்ல. நீர் எமக்கு வேண்டிய மனிதராக இருந்தும், என்னுடைய புருஷர் இல்லையென்று நினைத்து நீர் இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கலாமா? இது உமக்கு அடுக்குமா? இன்றையதினம் காலையில் எங்கள் மாளிகைக்கு வந்து விட்டுப் போனவர் மறுபடி எப்போது திரும்பி வந்தீர்? உம்முடைய விஷயத்தில் யாதொரு தீங்கும் நினையாத என் பெரிய தகப்பனார் விஷயத்திலும், என் விஷயத்திலும் நீர் இப்படிப்பட்ட கெடுதல்களைச் செய்தது நியாயமாகுமா?” என்றாள். அதைக்கேட்ட கட்டாரித்தேவன் சந்தோஷமாகப் புன்னகை செய்து, ‘ஏன் நியாயமாகாது? உங்கள் விஷயத்தில் யாதொரு தீங்கும் நினையாதவளும், மகா நற்குணவதியுமான ஷண்முகவடிவென்ற பெண்ணை நீயும் உன் பெரிய தகப்பனாரும் சேர்ந்து விசை வைத்த நாற்காலியில் மாட்டி, அவளது கற்பை அழிக்க முயன்றீர்களே! அது நியாயமென்று நினைத்துத் தானே நீங்கள் அப்படிச் செய்தீர்கள்? அந்தப் பெண்ணின் மேல் உன் பெரிய தகப்பனார் மோகங் கொண்டார். அதனால் நீங்கள் எந்தக் காரியத்தைச் செய்தாவது அவளை அடைய முயற்சித்தீர்கள் அல்லவா? அதுபோல, நானும் உன்னுடைய அபாரமான அழகைக் கண்டு உன்மேல் மையல் கொண்டேன்; அதனால் உன்னை, பலவந்தமாக எடுத்து வந்தேன். அந்தப் பெண்ணாவது நல்ல பதிவிரதை; இதுவரையில் துன்மார்க்கத்திலேயே இறங்காதவள் என்பது தெரிகிறது. நீயோ இந்த விஷயங்களில் நன்றாக அடிபட்டுத் தேறியவள். சொந்த புருஷர் இருக்கையில் பல கள்ளப் புருஷர்களை வைத்திருந்தவள். மகாராஜா முதலியோரையும் வசப்படுத்தினவள். கடைசியில் மொட்டைக் கடிதம் எழுதிப் புருஷனையும் சிறைச்சாலைக்கு அனுப்பினவள். இப் படிப் பட்ட அனுபவசாலியான உன்னை நான் எடுத்துக்கொண்டு வருவது ஒரு பெரிய குற்றமாகுமா?” என்றான்.