பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27

தாகச் சொல்லி லீலாவதியை உடனே அழைத்துக் கொண்டு வரும்படி ஜெமீந்தார் அந்த வேலைக்காரி யிடம் சொல்லி அனுப்ப, அவள் மேலே போய் லீலாவதியிடம் அவ்வாறே தெரிவித்தாள். லீலாவதி தான் கீழே போய், வந்திருப்பது யாரென்று அறிந்துகொண்டு இரண்டொரு நிமிஷத்தில் திரும்பி வந்துவிடுவதாக ஷண்முகவடிவினிடத்தில் சொல்லிவிட்டு உடனே கீழே இறங்கித் தனது பெரிய தகப்பனார் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அன்றைய பகலுக்குள் லீலாவதி நிரம்பவும் பாடுபட்டுப் பலவகையான தந்திரங்களைச் செய்து ஷண்முகவடிவின் மனதைக் கலைத்துத் தமது இஷ்டத்துக்குத் தகுந்தபடி மாற்றி வைத்திருப்பாள் என்று நிரம்பவும் உறுதியாக மருங்காபுரி ஜெமீந்தார் நம்பி வந்தார். ஆகையால், லீலாவதியைக் கண்டவுடன் மிகுந்த ஆவலோடும் புன்முறுவலோடும் அவளது முகத்தை உற்று நோக்கினார். அவளது முகம் சந்தோஷமற்றதாயும், வாட்டமடைந்து கவலை கொண்டு சுருங்கியதாயும் இருக்கக் காணவே, மருங்காபுரி ஜெமீந்தார் ஆவலோடு அவளை நோக்கி, ‘லீலாவதி என்ன சமாசாரம்? காரியம் காயா பழமா? ஏன் உன்னுடைய முகம் நிரம்பவும் விசனமாக இருக்கிறதே? நான் இல்லாத காலத்தில் இங்கே ஏதாவது விசேஷம் நடந்ததா? பெண் எப்படி இருக்கிறாள்?’ என்று வினவினார்.

அதைக் கேட்ட லீலாவதி அன்றையதினம் பகலில் கட்டாரித் தேவனும் இன்ஸ் பெக்டரும் வந்து தன்னோடு பேசிய விவரத்தை அவரிடம் சொல்லாமல் மறைத்துவிட வேண்டுமென்று முன்னரே தனக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்தவள் ஆதலால், அவரைப் பார்த்து, ‘நீங்கள் இன்று காலையில் போனது முதல் நான் இந்தப் பெண்ணோடு கூடவே இருந்து நிரம்பவும் தந்திரமாகவும் சமயோசிதமாகவும் பேசி, அவளுடைய மனசையும் ஆசையையும் உங்கள் மேல் திருப்ப வேண்டுமென்ற கருத்தோடு பலவகையில் முயற்சி