பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பழக்கம்


தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி. பார்த்தீர்களா பழக்கத்தின் வலிமையை? இது போல ஏதாவதொரு பழமொழியையோ அல்லது திருக் குறள் மணியையோ முதலில் எழுதிக் கட்டுரை தொடங்குவது தமிழில் மரபாக நீண்ட காலம் இருந்து வந்தது. இப்பொழுது அது குறைந்து கொண்டு வந்தாலும் அந்தப் பழக்கம் என்னை மட்டும் விடாது பிடித்துக் கொண்டிருப்பதால் அப்படியே தொடங்குகின்றேன். விடாது ஒன்றைப் பழகி வந்தால் அது பிறகு நம்மை எளிதில் விட்டுவிடாது.

எனக்கு ஒரு திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரைத் தெரியும். அவர் தம் 64-ஆம் வயதிலும் பள்ளி நடத்தி வந்தார்! பிறகு அறவே பல்லென்ற உறுப்பே அற்று விட்டதால் அவர் சொல்லுவது யாருக்கும் ஒன்றும் விளங்காமற் போயிற்று: அதனால் அவர் ஒய்வெடுத்துக் கொள்ள நேரிட்டது. இருந்தாலும் காலையில் பிள்ளைகள் எல்லோருக்கும் முன்னால் அவர் பள்ளியில் தோற்றமளிப்பார். சில வேளைகளில் பிரம்பும் கையில் இருக்கும். நீங்கள் ஒன்றாம் அடி, இரண்டாம் அடியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பள்ளிக்கு ஆசிரியர் வந்த பிறகு முதலில் வந்தவனுக்கு ஒரடி. இரண்டாவது வந்தவனுக்கு இரண்டடி இந்தக் கணக்கில் காலம் என்கிற ஒடுகாலிக்கு இடமே கிடையாது. எந்த நேர மானாலும் ஆசிரியர் வருவதற்கு முன் வந்தவர்கள் தப்பினார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் வந்த எண்ணிக்கைப்படி பிரப்பம்பழம் கிடைக்கும் அந்தப் பெரிய