பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழக்கம்

19


வேண்டும். நமது எண்ணம் அதில் ஊன்றியிருக்க வேண்டும். பிறகு அது நமது முயற்சியின்றியே இயல்பாக நடைமுறையில் வந்துவிடும், நல்ல பழக்கங்களை இவ்வாறு உண்டாக்கிக் கொள்வது வாழ்க்கையில் வெற்றியடைய ஒரு சிறந்த வழியாகும்.

ஆனால் ஒருநாளும் நாம் பழக்கத்தின் அடிமையாய் விடலாகாது. நல்ல பழக்கமென்றாலும் அது நமது கையாளாக இருக்கவேண்டும். காலை எழுந்ததும் சூடாகக் காபி சாப்பிடுவதை நான், நல்ல பழக்கமென்று சொல்லவில்லை. எடுத்துக் காட்டாக சட்டென்று கிடைத்ததால் எடுத்துக் கொள்கிறேன். மேலும் இது பலருக்கு உடனே விளங்கக்கூடிய எடுத்துக்காட்டு. இந்த வாடிக்கை யுள்ளவர்களுக்கு ஒரு நாள் காலையில் காபி கிடைக்காவிட்டால், அன்று முழுவதும் அவர்கள் படும்பாட்டைப் பார்க்க வேண்டுமே! தலைவலி வந்து விடும்; மூளை வேலையே செய்யாது; நாள் முழுதும் தமக்குக் கீழே பணி செய்பவர்களின் மேல் சள்ளென்று விழுவார்கள்; ஏன், அவர்கள் அருமைக் குழந்தைகளும், மனைவியுமே அன்று அவரது சிடுமூஞ்சிப் பார்வையிலிருந்து தப்ப முடியாது. இது போன்ற அடிமைத்தனம் நல்ல பழக்கத்திடத்தும் ஆகாது.

பழக்கம் மனிதனுடன் கூடப் பிறக்காவிட்டாலும் அவனுடைய முயற்சியால் உடன் பிறந்த இயல்பான தன்மைகள் போல் அமைந்து விடும். அப்படி அமைவது விரும்பத்தக்க பழக்கமாயினும் அவன் அடிமையாகாத வரையில், நன்மையாகவே முடிகின்றது.