பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரி விளையாட்டு

21


என் உள்ளம் அவர்கள் விளையாட்டிலே ஊன்றி விட்டது. அவர்களுடைய விளையாட்டுப் பொருள்கள் அவர்களுடைய பேச்சு, அவர்களுடைய ஏழ்மை எல்லாம் என் உள்ளத்திலே ஆழ்ந்து பதிந்துவிட்டன. அந்தோ என்று இறங்கும்படியான அவர்கள் நிலைமைக்கு நமது சமூகமல்லவா முக்கிய காரணம் என்ற எண்ணமும் உடன் தோன்றி என்னைத் தலை குனியச் செய்தது. பலவித உணர்ச்சிகள் உள்ளத்தில் எழுந்து மோதின. கோவையில்லாத சிதறுண்ட கவிதை வரிகள் பொங்கின. "இக் குழந்தைகள் இப்படி வறுமையிலும், அந்தகாரத்திலும் அழுந்திக் கிடக்கின்றார்களே; அந்தோ! இவர்களை இந்நிலையில் வைத்து வாளாவிருக்கும் சமூகம் மனித சமூகமாகுமா ? அந்தச் சமூகத்திற்கும் உய்வுண்டா? முன்னேற்றம் உண்டா? என்பன போன்ற கசப்பான எண்ணங்கள் மேலெழுந்தன. நெருப்பைக் கக்கும் சொற்கள் வெடித்தன. ஆனால், நாட்கள் செல்லச் செல்லக் கடுஞ்சினமும் ஆத்திரமும் மெல்லத் தணியத் தொடங்கின. தணிந்த போதிலும் அந்தச் சேரியும், விளையாட்டும் மறையாமல் இரக்கம், ஏழ்மை, அவலம் என்னும் திரையிலே எழுதிய ஒவியம்போலத் தெளிவாக என் முன்பு தோன்றிக் கொண்டிருந்தன; இன்றும் தோன்றுகின்றன.

அந்தச் சேரிக் காட்சி என் உள்ளத்திலே குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தபோதே அது கவிதையாகக் கட்டுக்கடங்காமல் வெளிப்பட்டது. காரமும், கசப்பும், நெருப்பும் கலந்த மொழிகளிலே அப்பொழுது என் உணர்ச்சிகள் உருவெடுத்தன. ஆனால் முடிவாக அச்சிலே வந்த கவிதை அதுவல்ல. பல நாட்களின் பின் ஏற்பட்ட அமைதியின் தெளிவிலே பிறந்த கவிதைதான் வெளி வந்தது. அதில் கற்பனையைவிட உள்ளதை உள்ள