பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரி விளையாட்டு

25


என்று என் உள்ளம் மறுபடியும் ஏங்கலாயிற்று. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம்,

இடிந்த சுவர் விழுகூரை
எறும்புவளை பழங்கஞ்சி
மடிந்தவால் பன்றியலால்
மற்றென்ன கண்டுள்ளார்?

இவ்வாறு நான் நீள நினைத்துக் கொண்டிருக்கும் போது அச்சிறு பெண் சிறுவனைக் கூவிப் பேசிய மொழிகள் என் செவியில் நுழைந்தன.

'ஓடிவா, கஞ்சிகுடி;
மண் வெட்டப் போகணுமாம்
பண்ணையார் ஏசுகிறார்’

அடடா, விளையாட்டுக் காலத்தில்கூடத் தான் ஓர் அடிமை என்ற எண்ணம் மறக்கவில்லையே! தாய் தந்தையர்களைப் பண்ணாடிகள் ஏசுவதையும் கொடுமை செய் வதையுமே கண்ட குழந்தைகள் அதே விளையாட்டுத்தான் விளையாடுகின்றன. விளையாடித் திரியும் குழந்தைப் பருவத்தில்கூட இவர்களுக்குத் தம்மை தலைமையான நிலையில் வைத்து எண்ண முடியாதா? இவர்கள் என்றும் அடிமையிலேயே உழன்று, அடிமை எண்ணத்தையே எண்ணி, நோய்க்கும் வறுமைக்கும் அறியாமைக்கும் வயிற்றுக்கும் அடிமையாகக் கிடந்து மடிய வேண்டியது தானா? இவர்களுக்கு உய்வே இல்லையா? இம்மாதிரியான அவல எண்ணங்கள் உள்ளத்திலே எழுந்து கவிதையின் முடிவாக நின்றன.

வாழ்க்கை தனிற்புகுந்து
வல்லடிமை தான்செய்து
பாழ்த்த வயிற்றினுக்கே
பசிதீர்த்து மாயுமுனர்