பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பூவின் சிரிப்பு


ஆண்டுகளில் 14 மணி 24 நிமிஷம் வேறுபாடு ஏற்படுகிறது.

ஆதலின், இன்று பின்பற்றப்படும் ஆண்டுக் கணக்கே எல்லாவற்றையும் சிறந்ததாக இருந்தாலும், எல்லா நாடுகளும் இதை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கிலாந்து சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகே இதை ஏற்றுக் கொண்டது. அப்படிக் காலந் தாழ்த்து ஏற்றுக் கொள்கிற போதும் ஒரு பெரிய அமளி ஏற்பட்டுவிட்டது. இங்கிலாந்தின் பழைய கணக்கின்படி அது உலகத்திற்கு பதினொரு நாட்கள் பிந்தியிருந்தது! அதனால் இந்தப் புதுக் கணக்கின்படி 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதிக்குப் பிறகு உடனே 14 ஆம் தேதி வரும்படி யாக மற்ற நாட்களைத் தள்ளிவிடவேண்டுமென்று பாராளு மன்றத்திலே தீர்மானிக்கப்பட்டது. உடனே பொது மக்கள் ஆர்ப்பரித்துக் கிளம்பி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் பதினொரு நாட்கள் போய் விடுவதா? இதற்கு யார்தான் இணங்க முடியும்? இந்தத் தீர்மானம் கொண்டுவந்த செஸ்டர்பீல்டு என்பவர் வீதியில் வந்தபோது, அவர் மேல் கல்மாரி பொழியத் தொடங்கிவிட்டது. மக்களுக்குப் பதினொரு நாள் போனதோடு, செஸ்டர்பீல்டின் வாழ்நாளே போய் விடுமோ என்றாகிவிட்டது!

இப்படி யெல்லாம் ஆண்டுக் கணக்கை உறுதி செய்ததோடு நில்லாமல், இந்த உலகம் தோன்றி எத்தனை ஆண்டுகளாகியிருக்கும் என்றும் கணக்கிட்டுப் பார்க்கத் தொடங்குகிறோம். இந்த உலகம் தொடக்கத்தில் சூரியனிடமிருந்து பிரிந்து வந்த ஒரு நெருப்புப் பந்தாக இருந்ததென்றும், வர வரக் குளிர்ந்துகொண்டே வந்து உயிர்