பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழைக்காலக் காட்சி

காலை வேளையிலே உலாவப் போவதென்றால் எனக்கு எப்பொழுதுமே அளவில்லாத விருப்பம். அதிலும் நீலமணிக் குன்றுகள் அழகாகப் பின்னால் நிமிர்ந்து நிற்கும் இந்த நிலங்களின் வழியே தனித்துப் போக வாய்ப்புக் கிடைத்துவிட்டால் சொல்லவேண்டியதே இல்லை.

அதனால் இன்று கிழக்கு வெளுத்துப் பகலின் அறிகுறி சிறிது தோன்றியவுடனே புறப்பட்டுவிட்டேன். இரவெல்லாம் ஒரே மழை. சளசளவென்று சிறிது நேரம் பெய்யும்; சிணுங்கு சிணுங்கென்று கொஞ்ச நேரம்; ஓய் வென்பதே கிடையாது.

இப்பொழுது மழை நின்று விட்டதென்றாலும் மரங் களும் செடிகளும் முத்துமுத்தாகத் துளிகளைத் தாங்கி நிற்கின்றன. சிறகை உலர்த்திக் கொண்டு காகமொன்று பன்னீர் மரத்தில் போய் அமர்கிறது. மரம் அழகிய வெண்மையான பூக்களோடு மழை முத்துக்களையும் பூமியில் உதிர்க்கின்றது. குறும்புச் சிறுவர்கள் மூவர் மரக் கொம்புகளைக் குலுக்கிக் குலுக்கி ஒருவர்மேல் ஒருவ ராகத் தண்ணீர்ச் சொட்டுக்களைச் சிந்திக் கொண்டிருக்கிறார்கள்.

வானவெளி சிறிதும் கண்ணுக்குப் புலனாகவில்லை. புகையைச் சுருளாக மடித்து வானத்தையே மறைத்துப் பரப்பிவைத்ததுபோல எங்கும் மேகப் படலம். கறுத்துச் சூல் முதிர்ந்த கொண்டல் அல்ல; கொட்டிப் பட்டை செய்யக் குவித்த வெண் பஞ்சுபோன்ற மஞ்சுமல்ல.