பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

நல்ல நூல்களைப் படிக்க வேண்டும்; இல்லாவிட்டால் தனியாக உலாவச் செல்லவேண்டும். இந்த இரண்டு செயல் களிலும் எனக்கு அளவு கடந்த விருப்பம் உண்டு. நல்ல நூலைப் படிக்கும்போது அதை ஆக்கியோனுடன் சேர்ந்து கொண்டு அவன் தோற்றுவிக்கும் ஒரு தனி உலகத்திலே மனம் உலவுகிறது: தனியாக உலாவும்போது அது தனது சொந்தக் கற்பனை உலகத்திலே யாதொரு கட்டுப்பாடு மின்றிப் பறந்து திரிகிறது. நூலாசிரியன் தோற்றுவிக்கும் உலகமும், மனம் தானே உண்டாக்கிக்கொள்ளும் உலகமும் எனக்குப் பெரியதோர் இன்பம் பயக்கின்றன. இவ்வாறு கூறுவதால் நாம் அனைவரும் வாழ்கின்ற இந்த மண்ணுலகத்தினிடத்தே எனக்கு விருப்பம் இல்லை என்று நினைக்கக் கூடாது. அதன் காட்சிகள், பெருமைகள், சிறுமைகள், மூட நம்பிக்கைகள், முன்னேற்றங்கள் எல்லாம் என்னைக் கவருகின்றன. தனியாக உலாவும்போது இந்த உலகத்தின் உயிராக நிற்கும் இயற்கை அன்னைதானே எனக்குத் துணை? எனது கற்பனே உலகத்திற்கும் இவ்வுலகமும் அதன் போக்குமே துாண்டுகோலாக நிற்கின்றன. ஆனால் மக்கட் கூட்டத்தை விட்டு விலகி நின்று அதன் போக்கைக் கூர்ந்து கவனிப்பதைத் தான் என் மனம் பெரிதும் நாடுகின்றது. மக்கட் கூட்டம் என்கிறபோது அதில் என்னையும் சேர்த்தே எண்ணுகிறேன். நான் அதற்குப் புறம்பல்ல. அதன் சிறுமைக்கும் பெருமைக்கும் நானும் ஒரு காரணம். உலகத்தின் வாழ்க்கை விளையாட்டைப் பார்க்கிறபோது மட்டும் மனம் தனித்து நிற்கவேண்டும் என்பது எனது ஆவல்.

இத்தொகுதியிலே உள்ள கட்டுரைகளெல்லாம் மேலே கூறிய இரண்டு விருப்பங்களின் விளைவாகவே பெரும்பாலும்