பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

பூவின் சிரிப்பு


தொடுவதில்லை. ஆடு புல்லை மேய்கிறது. கரிக் குருவி பூச்சிகளைப் பிடித்துத் தின்கிறது. ஆடு வாகனமான தோடு சரி. ஆனால் எங்களைப் பாருங்கள். எசமானர்கள் எங்கள் மேலே உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களைச் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குகிறார்கள், அதோடு விட்டு விடுகிறார்களா என்ன? அதுதான் இல்லை. நாங்கள் பாடுபடுவதால் கிடைக்கும் பொருள்களையெல்லாம் எடுத்துக்கொள்ளுகிறார்கள். கைக்கெட்டினது எங்கள் வாய்க்கு எட்டுவதில்லை. அரைவயிறு கஞ்சிக்குக்கூட எங்களுக்கு உரிமை கிடையாது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் இந்த ஆடுகளை நாள்தோறும் காலையிலிருந்து பொழுது சாயும் வரையில் மேய்க்கிறேன். கண்ணுங் கருத்துமாக வளர்க்கிறேன். ஆனால் ஆடுகள் குட்டி போட்டுப் பெருகப் பெருகப் பண்ணாடி விற்றுப் பணத்தை யெல்லாம் பையில் போட்டு நிரப்பிக்கொள்கிறார். எனக்குக் கஞ்சிக்கே திண்டாட்டம்' என்றான் அவன்.

அவன் சொன்னது உண்மை. முதல் படைத்தவன் கைக்குள் உழைப்பாளி அடங்கிக் கிடக்கிறான். அவன் உழைப்பால் கிடைக்கும் பயனைக் கவர்ந்து கொள்கிறான். பாடுபட்டவன் வயிறு வாடுகிறான். இதை எண்ணிப் பார்த்தால் கரிக் குருவி மனிதனைவிட மேலானதுதான்.

அந்த இடையனைச் சந்தித்துப் பேசியது முதல் நான் கரிக் குருவியை அருவருப்போடு நோக்குவதை விட்டு விட்டேன்.