பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பூவின் சிரிப்பு

 பொங்கலுக்கென்று புதிய பானைகள், சட்டிகள் ஒவ்வொரு வீட்டிலும் குவிகின்றன.

கொண்ட வீட்டிலிருந்து இளம் பெண்ணும், புது மருமகனும் இணை இணையாக வந்து சேருகிறார்கள்.

எங்கும் பூரிப்பு; சிரிப்பு.

இவ்வாறு அந்த நாள் முடிகின்றது. மறுநாள் நடக்கும் மாட்டுப் பொங்கல்தான் தனிச் சிறப்புள்ளது. உழவனுக்கு மாடு தெய்வமல்லவா?

அன்று உச்சிப்பொழுதிற்கு மேல் ஊரில் யாரும் இல்லை. பொங்கல் வைக்கப் பட்டிக்குப் புறப்படுவது ஓர் அழகான காட்சி, இடுப்பிலே புதிய சேலை, கொண்டை நிறையப் பூ; நெற்றியிலே குங்குமப் பொட்டு; வாய் நிறைய வெற்றிலை; இதழ் நிறையப் புன்முறுவல்: காதிலும், கழுத்திலும், கையிலும், நகைஇப்படிப் பெண்கள் புறப்படுவார்கள். புது மருமகனுக்குப் புது வேட்டி, சரிகை மின்னும் மேலங்கி; இப்படிக் கோலம் கொண்ட அவர்களும், அவர்களோடு நகையாடிச் சிரித்துப் பேசிக்கொண்டு இளைஞர்களும் வருகிறார்கள். பெரியவர்கள், நேரமாகிவிட்டது. எல்லோரும் புறப் படுங்கள். வண்டியில் பொங்கலுக்கு வேண்டியவற்றை யெல்லாம் மறக்காமல் வைத்துக் கொண்டீர்களா? இளநீர் வந்து சேர்ந்துவிட்டதா?எங்கேயடா அந்த மாரப்பன்? ஏண்டா வண்டியைப் பூட்டவில்லையா?” என்று இப்படித் தூண்டி விரைவு படுத்துகிறார்கள்.

"பட்டிப் பொங்கல் வைக்கப் போகிறோம்" என்று சொல்லிப் பெரியவர்களையெல்லாம் மற்றவர்கள் கும்பிடுகிறார்கள். அவர்களுடைய வாழ்த்துக்கள் கிடைக்கின்றன.