பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறட்டை

77

இடத்திற்கே வந்து படுத்துவிட்டேன். 'சரி, இன்று எனக்கு வேறு வழியில்லை. இங்கேயே கிடந்து பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்’ என்று முடிவு செய்து கொண்டேன். ஓர் இரவுக்கே இந்தப் பெருந் தொல்லை யென்றால் அந்த மனிதன் வீட்டிலே மனைவி மக்கள் ஆண்டு முந்நூற்றறுபது நாளும் இதை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று அவர்கள்பால் பரிவு கொள்ளலானேன்.

எவ்வளவு நேரம் நான் அவர்களுடைய அவல நிலைமையைப் பற்றி எண்ணிக்கெண்டிருந்தேனோ, தெரியாது. எப்படியோ அந்த எண்ணத்தோடேயே உறக் கத்தில் ஆழ்ந்துவிட்டேன். மறுநாட் காலையில் யாரோ ஒருவர் அதட்டி அதட்டி எழுப்பியிராவிட்டால் எப்பொழுது விழித்திருப்பேனென்று திட்டமாகச் சொல்ல முடியாது. "ஓய், யாரையா நீர்? மணி எட்டாகியும் இப்படிக் குறட்டை போட்டுக் கொண்டு தூங்குகிறீரே; எழுந்திரும்" என்று அதட்டும் குரல் காதில் புகுந்து என்னைத் திடுக்கிடச் செய்தது. எழுந்து சுற்று முற்றும் பார்த்தேன். அப்பொழுது உறங்கிக்கொண்டிருந்தவன் நான் ஒருவன்தான்!