பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எங்கள் வீடு

87


 றந்தானா ? என் உடம்பைப் பற்றியே எண்ணிப் பார்ப்போம். எத்தனை வகையான கிருமிகளும், புழு வகைகளும் இதைத் தங்கள் உடைமையென வாழ்ந்து வருகின்றன: "உன்னையே நீ எண்ணிப் பாரு இந்த உலகத்தில் எது சொந்தம் யோசித்துக் கூறு' என்று பாடியவன் இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் பாடினானோ?

"இந்த அந்தி மல்லிகையை வந்து பாருங்கள். நீங்கள் பார்த்து மகிழவேண்டுமென்று அது எத்தனை அழகாகப் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கின்றது: வந்து பாருங்கள்’’ என்று என் மனைவி அன்போடு அழைத்தாள். ஆமாம், அந்தச் செடி தன்னுடைய மலரின் குங்கும வண்ணப் பேரழகையெல்லாம் தனக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்ளவில்லை. அதோ அங்கே மலரத் தொடங்கியுள்ள முல்லைப்பூ தனக்கே உரித்தான தனி இன்ப நறுமணத்தை வேறு யாரும் பங்கிட்டுத் துய்க்கக்கூடாதென்று கருதவில்லை, இளங்காற்று உரிமை யோடு அதனிடம் சென்று நறுமணத்தை வாரிக்கொண்டு வருகிறது. அந்த மலர் தன் வாழ்வு முழுதும் தனது உடைமையான தனிச் செல்வத்தை அள்ளி வழங்குகிறது. அதிலேதான் இன்பம் இருக்கிறதுபோலும். நறுமணத்தை முகந்துவந்த இளங்காற்றும் தானே அதை வைத்துக்கொள்ளவில்லை, அதை எங்கும் பரப்புகிறது. இந்த எண்ணம் உள்ளத்திலே அரும்புவிடத் தொடங்கி யதும் என் போக்கே மாறலாயிற்று. மகிழ்ச்சியும் அமைதியும் எங்கிருந்தோ வந்து என் உள்ளத்திலே குடிகொண்டு புதிய உயிர் தழையச் செய்யலாயின. சிட்டுக்குருவிகள் வாழ்க என்று நான் ஆசிகூறத் தொடங்கினேன். என் மனைவியின் கண்களிலே ஒளிபடர்ந்து முகம் மலர்ந்தது. எனக்கு வீடு கிடைத்தது.