பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பூவின் சிரிப்பு



வோம்; உங்களைப்போல் இன்பம் செய்கின்றவர்களையும் துன்புறுத்துவோம்; எங்கள் அறிவு முடமானது. உதை பட்டு அடிபட்டுத்தான் அது திருந்தும். எத்தனையோ சான்றோர்கள் எங்களுக்கு இன்பவாழ்வுபற்றி இன்னுரை வழங்கியிருக்கிறார்கள். அண்மையிலே எங்களிடையே அன்புருவமாக நடமாடிய காந்தியடிகள், அன்பு, கொல்லாமை ஆகிய உயர் நெறிகளைப்பற்றி எங்களுக்கு எவ்வளவோ கூறியுள்ளார்.

நாங்கள் அவரைப்போன்ற சான்றோர்களைப் போற்றுவதில் தவறுவதில்லை; அவர்கள் கருணையால் கூறியமொழிகளைப் பின்பற்றுவதில் மட்டும் போதுமான ஊக்கம் எங்களுக்கு என்றும் நிலையாக இருப்பதில்லை. எங்கள் மூடத் தன்மைக்கு அது சான்று. அதனால் நாங்கள் இடர்ப் படுகிறோம். உங்களையும் வதைக்கிறோம். பொறுத்துக் கொள். எங்களுக்கு நல்ல காலம், நல்ல அறிவு விரைவில் வரவேண்டுமென்று நீ பரிவுகொள். ஒரு பாட்டுப் பாடு. உனது தேன் இசை எங்கள் கருங்கல் மனத்தை மேலும் மேலும் கரையச் செய்யட்டும். பாட்டுச்கு இந்த வல்லமை உண்டு என்கிறார்கள். உன் பாட்டால் எங்கள் கொலையுள்ளமும் மென்மை அடைய வேண்டும்.

குயிலா, பாடு. 'உங்களை மன்னித்தேன்’ என்று பாடு. அன்புக்கே இடமாக எங்கள் உள்ளம் மலர்வதற்கு உன் பாட்டுத் தேன் உதவ வேண்டும். குயிலா, பாடு. இன்னா செய்தார் நாணி மனமாற்றம் அடையப் பாடு.

'பழைய புன்மை இருள் இன்றே மறைக' என்று பாடு. புதிய இன்ப ஒளி, அன்பெனும் நந்தா ஒளி இன்றே ஓங்குக' என்று பாடு.