பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(22)

போலீஸ் அமைச்சர் அவர்கள் சொன்னதுபோல, 'சமுதாயத்தில் கலவரம் ஏற்படக்கூடும்' என்கிற வாதத்தை நான் உண்மையில் உணருகிறேன். அதைத் தடுப்பதற்கு வேறு வழிகள் சாத்தியமானால், சட்டம் வேண்டாம். முடிவான ஒரு சட்டத்தைப் போடுவது. மேலும் அவர்களை அந்தக் காரியத்தைச் செய்யும்படி தூண்டச் செய்வதாகவே ஆகும் என்பதற்காகவே முன்பு சொன்னேன்.

"எங்களுக்கும் — திராவிடர் கழகத்திற்கும் உள்ள முறைகளில் வித்தியாசம் இருக்கிறது என்பதையும். பார்ப்பனர்களை நாங்கள் எந்தவகையில் நடத்துகிறோம் — திராவிடர் கழகம் எந்தவகையில் நடத்துகிறது என்பதையும் கவனித்துப் பார்த்திருந்தால் நிதியமைச்சர் அவர்களுக்கே தெரிந்திருக்கும்.

"திராவிட முன்னேற்றக் கழகத்தில் பார்ப்பனர்கள் உறுப்பினாகளாக இருக்கிறார்கள் ; பார்ப்பனர்களாலேயே 'பார்ப்பனீயம்' அழிக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம். இதற்குக் கொஞ்சம் கால தாமதம் பிடிக்கும் என்றாலும்கூட இந்த வழிதான் உறுதியானது என எண்ணிக்கொண்டிருக்கிறோம். காலதாமதம் ஆனாலும், நாகரீகமான முறையில் பார்ப்பனீயத்தை ஒழிக்க திராவிட முன்னேற்றக் கழகம் உழைக்கிறது. இதே விஷயத்தை வேறு வகையில் தீவிரமாக—காலதாமதமின்றி நிறைவேற்றிடத் திராவிடர் கழகம் துடிக்கிறது. அதனாலேயே, 'இந்த இரண்டு கட்சியும் ஒன்றுதான்' என நிதியமைச்சர் அவர்கள் சொல்லி, அதனால் அவர் அடைகிற இலாபம் என்னவோ தெரியவில்லை? இதனால் ஒரு சில பிராமணர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இல்லாமல் செய்துவிடுகிற இலாபத்தை அவர் அடைந்தாலும் நான் கவலைப்படவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் கொள்கையைப்பற்றித் தெளிவாகச் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். ஆகையால் அதைக் சொல்கிறேன்.

"சேரிகளை ஒழிக்கவேண்டும் என்பதற்காக சேரிகளை எல்லாம் கொளுத்திவிட முடியுமா என்கிற வாதத்தை நிதியமைச்சர் அவர்கள் எழுப்பினார்கள். அப்படி அவர் கேட்கின்ற நேரத்தில்—ஒரு பெரும் வழக்கறிஞராக கோவையில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில், இந்த மாதிரியான கேள்விகள் எத்தனை போட்டு எதிர்க்கட்சியைத் திணற அடித்திருப்பாரோ என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.