(24)
தோழர் என்கிற முறையிலாவது அவரை அணுகுவது சரியான கொள்கைதான் என்று நான் கருதுகிறேன்.
"தன்னுடைய மாஜி தலைவர், மாஜி தோழர் இவரைப் பற்றி சபையில் யாராவது ஏதாவது சொன்னால் மனம் புண்படுமே என்பதுபோலத்தான், இன்றைக்கு சபையில் காமராசர் இல்லை என்று கருதுகிறேன். கனம் நிதியமைச்சர் என்னைப்பற்றிச் சொன்னதுபோல, 'அவர் ஓடிவிட்டார்' என்று சொல்லமாட்டேன் நாகரிகமான பாஷையில், 'ஒளிந்து கொண்டார்' என்று கருதலாம். தான் இவ்விடத்திலிருந்து துக்கப்படாமல் வேறு இடத்திலிருந்து மனத்திற்கு சாந்தி ஏற்படுத்திக்கொள்கிறார் என்று கருதுகிறேன்:
'ஆனாலும், போலீஸ் அமைச்சர் அவர்கள் பேசும்போது, 'காமராசர் போய்ச் சந்திப்பதைக் காட்டிலும், நீங்களே போய்ச் சந்திதிக்கலாமே; தந்தையும் மகனும் பிரிந்திருந்தாலும் இந்தக் காரணத்தால் சந்திப்பது மிகவும் பொருத்தமாயிற்றே' என்று குறிப்பிட்டார்கள்; "பிரிந்துவிட்டதனால் இழந்துவிட்ட இலாபத்தை, திரும்பவும் சந்தித்து ஒட்டிக்கொள்வதன் மூலம் பெற்றவிடலாம்' என்றும் சொன்னார்கள்.
"அவர்களுடைய நல்லெண்ணத்தைத் துணைகொண்டு நான் அவரைப் போய்ச் சந்தித்துப் பார்க்கிறேன்; ஆனால் அதுவரையில், இந்தச் சட்டத்தை நிறுத்திவையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன், சட்டத்தை நிறுத்திவையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு அவரைப் போய்ச் சந்திப்பது தூது ஆகாது. 'இந்தக் குற்றத்தைச் செய்தால் இத்தனை வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும்' என்பதை அவரிடத்திலே, சென்று சொல்லும் அறிவிப்பாகத்தான் இருக்கும். அதைப்போய் நான் சொல்லவேண்டாம். பத்திரிகை வாயிலாக அவரே பார்த்துக்கொள்வார்.
"உண்மையில் நான் அவரைப் போய் இந்தக் காரணமாக சந்திப்பதனால் இலாபம் ஏற்படும் என்றால்—திரும்பவும் நாங்கள் அவரோடு ஒட்டிக்கொள்ள முடியும் என்றால்—மகன், தந்தை செய்ததை மறந்து, திரும்பவும் அவரிடத்தில் சென்று ஒட்டிக்கொள்வது குற்றங்களில் ஒன்றல்ல—குணங்களில் ஒன்று என்பதை நிதி அமைச்சர் அவர்களுக்குச் சொல்லவிரும்புகிறேன்.
"அவர் உதாசினப்படுத்தினாலும் நான் சென்று பேசுகிறேன்; அது வசையில் இந்தச் சட்டத்தை நிறுத்திவையுங்கள். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு நான் போய்ப் பேசினால் அவர் என்ன சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும்; 'எனக்கு எண்பது வயதாகிவிட்டது; மூன்று வருடம் சிறையில் கிடந்தால் என்ன? —முப்பது வருடம் சிறையில் கிடந்நால் என்ன? எனக்காக யாரும் துக்கப்படவேண்டாம்' எனத்தான் சொல்லுவார் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் இந்த நேரத்திலும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்—இப்போது வேண்டியது சந்திப்பு; சந்திப்புத் தேவையே தவிர ; சட்டம் தேவை இல்லை என்று கடைசியாகவும் வலியுறுத்திக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்'.
★★★