பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பெரியாரும்‌ சமதர்மமும்‌

என்ற முடிவினை முன்மொழிந்தார். இப்போதுள்ள இந்திய ஆட்சிகளே கையை விரித்து விடும். அன்றைய ஆங்கிலேய ஆட்சி ஆதரவு தரவில்லை. அதைக் கண்டித்து, ‘பாதுகாப்பு மன்னர்களுக்கா? பட்டினிகளுக்கா?’ என்று புரட்சி, தலையங்கம் தீட்டியது.

பெரியார் மூட்டிய சமதர்மத் தீ, கொழுந்து விட்டெரியும்படி பார்த்துக் கொண்டார்கள் இயக்கத் தோழர்கள். அதில், குறிப்பிடத்தக்கது, இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த சுயமரியாதை மாநாடாகும். அதற்குச் சில வாரங்களுக்கு முன் நடந்த மன்னார்குடி சமதர்ம மாநாடும் பெருமைக்குரியது.

உலகத் தொழிலாளர் நாளாகிய மே நாளைச் சிறப்பாகக் கொண்டாடச் செய்தது ‘புரட்சி’. சோவியத் ஆட்சியின் இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டம் பற்றிய கட்டுரையை வெளியிட்டது ‘புரட்சி’. ஆங்கில நாட்டின் இலக்கிய மேதையாக விளங்கிய பெர்னாட்ஷா, பொது உடைமை பற்றிக் கூறியவற்றை வெளியிட்டது ‘புரட்சி’. அவற்றை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது. அவை இதோ!

‘பொது உடைமை பரவப் பரவ நாகரிகம் வளரும்.’
‘பொது உடைமையின்றி நாம் வாழ முடியாது’
‘நாளேற நாளேற, பொது உடைமை வாழ்வு மலர்ந்து வருகிறது’

தந்தை பெரியார், பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியதற்காகச் சிறை பட்ட பிறகும், அவருடைய வார இதழாகிய ‘புரட்சி’ அதே பணியினைச் செய்து வந்தது.

‘போல்சுவிக்கியக்கம்—லெனின் வெற்றி’ என்னும் கட்டுரை 29-4-34 இல் வெளியாயிற்று. இரஷ்ய சிறைச்சாலைகள், குற்றவாளிகளை நடத்தும் முறையைப் பற்றிய கட்டுரை வெளிவந்தது.

புரட்சியின் மற்றோர் இதழ், ‘இன்றைய இரஷ்ய—குழந்தை இல்லங்களும், அரண்மனைகளும், ஆண் பெண் உறவும்’ என்ற நீண்ட தலைப்புடைய கட்டுரையைத் தாங்கி வெளி வந்தது அக்கட்டுரை. சோவியத் நாட்டிற்குச் சென்று வந்த, நித்திய நாராயண பானர்ஜி எழுதியது. அதை ஏ. வி. சீனிவாசன் என்பவர் மொழி பெயர்த்திருந்தார். இக்கட்டுரை அடுத்த இதழிலும் தொடர்ந்து வந்தது.