பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பெரியாரும்‌ சமதர்மமும்‌

இக்கொடுமையின் விளைவு என்ன? இந்தியச் சமுதாயத்தின் ஆறில் ஒரு பங்கினர், ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்பட்டவர்கள்.

எல்லாச் சாதிகளிலும், சில சிறு பெரு முதலாளிகளைக் காண முடியும். சிறுபெரும் நில உடைமைக்காரர்களைக் காண முடியும். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரில், முதலாளி உண்டா? இல்லை; பண்ணையார் உண்டா? இல்லை; குறுநில மன்னர் உண்டா? இல்லை.

அய்ம்பது ஆண்டுகள் வரை அத்தனை கோடி தாழ்த்தப்பட்டோரும், அன்னக் காவடிகள் என்று கூடச் சொல்லி விடலாம். அப்படியென்றால், அத்தனை கோடி மக்களும் சமதர்மத்திற்காகக் களத்தில் நின்று போராட வேண்டியவர்கள்.

‘சாதியும் ஒழிக; தனியுடைமையும் ஒழிக’ என்று வீறு கொண்டு, போராடுவதற்கு உரிமையும், தேவையும் இருந்த அப்பெரும் பிரிவின், மான உணர்ச்சியை நாம் தூண்டி விட்டோமா? அவர்களுக்குச் சமதர்ம திசை காட்டி, அவர்களோடு இணைந்து நடந்தோமா?

தொழிலாளர்களை மட்டும் அணி சேர்த்த, இந்திய பூர்ஷ்வா இனம், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் போராடி, அவர்களோடும் கைகோத்துப் பாடுபட்டிருந்தால், சாதிக் கொடுமையும், பணக் கொழுப்பும், தனியுடமையும் இதற்குள் பழங்கதையாகியிருக்கும். வருங்காலத்தில், அப்படி நடக்குமென்று எதிர்பார்த்துத் தாழ்த்தப் பட்டோர் ஏமாறக் கூடாது.

‘காலுக்குச் செருப்புமில்லை; வயிற்றுக்குக் கூழுமில்லை’ என்பது, அய்யருக்கோ, முதலியாருக்கோ, பிள்ளைக்கோ வந்துள்ள நோயல்ல. இந்நோய் நாய்க்கர் பிரிவையோ, நாடார் பிரிவையோ, வாட்டுவதை விட அதிகமாக, பரவலாகத் தாழ்த்தப் பட்டோரை வாட்டுகிறது. எனவே தாழ்த்தப் பட்டோர் அனைவரும், சாதியொழிப்புத் தேனில், சமதர்ம கார மாத்திரையை இழைத்துச் சாப்பிட முன் வர வேண்டும்.

தொழிற்சாலை போன அய்யர், பண்ணையிழந்த பிள்ளை, நாயக்கர், முதலியார், பல்லிழந்த பாம்பின் நிலைக்கு ஆளாவார்கள். அவர்களின் சாதி நஞ்சு வலிவிழந்து விடும். பழக்கக் கொடுமையால், சிறிது காலம் மிரட்டலாம்; நாமும் மிரளலாம்.