பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரட்சி ஏட்டில் சமதர்ம முழக்கம்

91

ஆனால், நெடுநாளைக்குச் செல்லாது. எனவே, பிறவித் தொழிலாளிகளான தாழ்த்தப்பட்ட உடன் பிறப்புகளே, மான உணர்வும், பொது உடைமை உணர்வும் வளர்ப்பதில் முனைப்பாகயிருத்தல் நல்லது. நிற்க.

ஆதிக்கவாதிகளின் குறும்பு நீடித்தது. மன்னார்குடியில் ஒருவரைக் கொண்டு, புரட்சியின் ஆசிரியரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி மீது மான இழப்பு வழக்கு தொடரப்பட்டது. பெரியவர் 2-6-34 இல் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார். அவர் காப்புப் பணம் கட்டி விட்டு வெளியே வந்து, எதிர் வழக்காடினார். இறுதியில் வழக்கு தள்ளுபடிச் செய்யப்பட்டது?

வெளியிடுவோராகிய கண்ணம்மாவைச் சும்மா விட்டார்களா? ஆசிரியர் பெயர் இல்லாது வெளியிட்டதற்காக வழக்குத் தொடுத்து, ரூபாய் 100 அபராதம் விதித்தனர்.

இதற்கிடையில், சிறையிலிருந்து ஈ.வெ. ராமசாமி விடுதலை ஆனார், சமதர்மப் பணியைத் தொடர்ந்தார்.

கோவை மாவட்ட திருப்பூரில் 1934ஆம் ஆண்டு, மே திங்கள் 20, 21 நாள்களில் செங்குந்தர் 12 ஆவது மாநாடும்,செங்குந்த வாலிபர் 2 ஆவது மாநாடும் நடந்தன. வாலிபர் மாநாட்டிற்குத் திரு. கா.ந. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) தலைமை தாங்கினார்.

தந்தை பெரியார் அம்மாநாடுகளில் கலந்து கொண்டார். அப்போதுதான் அண்ணா பெரியாருக்கு அறிமுகம் ஆனார்.

பெரியார் அப்போது, ‘சமதர்மம்’ பற்றி உரையாற்றினார். அவ்வுரையின் நடுவே,

‘இன்று ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு வேலை செய்து, சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அது போலவே, ஒரு கிராமம், ஒரு ஜில்லா, ஒரு மாகாணம் அல்லது நாட்டிலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல, வாழ முடியாதா? நாட்டில் உள்ள சொத்துக்களைத் தனித் தனியாக அவனவன் விருப்பம் போல் அனுபவிக்கும் தனியுரிமை, யாருக்கும் இல்லை’ என்று விளக்கினார்.

கஷ்டப்பட்டு உழைக்காது, சுக வாழ்வு வாழ்வதும், தேவைகளுக்கு மேற்பட்ட சொத்துக்களுக்குச் சொந்தக்காரனாக