பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. சமதர்மத் திட்டம் : நீதிக் கட்சி
ஏற்றது—காங்கிரசு மறுத்தது

அரிமா, அச்சம் அறியாதது. தன்மான இயக்கத்தின் தந்தை. சிறைக்கஞ்சாச் சிங்கம். எனவே, பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியதற்காகச் சிறைப்படினும், அப்பணி நிற்கவில்லை. அது தொடர, வழிவகை செய்ததை முன்னர் கண்டோம். ஈ.வெ. ராமசாமி சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்த பிறகு, திருப்பூர் செங்குந்தர் மாநாட்டில், சமதர்ம முழக்கம் எழுப்பியதைக் கண்டோம்.

‘புரட்சி’ வார இதழ் வாயிலாகவும், மேடைப் பேச்சுகளின் வழியாகவும், சமதர்மக் கொள்கையைப் பெரியாரும், அவரது பெருந்தொண்டர்களும் பரப்பி வரும் வேளையில், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயருடைய நீதிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமொன்று, சென்னையில் 1934 ஆம் ஆண்டு, ஜுன் 7,8 நாட்களில் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது. அக்கட்சியின் பேராதரவாளரான, ஈ. வெ. ராமசாமிக்கும் அழைப்பு வந்தது. அக்கட்சியை எடை போடவும், அதை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்று வழி காட்டவும், அவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார் பெரியார்.

‘புரட்சி’ இதழில் ஈ.வெ.ராமசாமி பின் வருமாறு எழுதினார்;

‘ஜஸ்டிஸ் கட்சியானது அரசியலிலும், சமூக இயலிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், வாழ்க்கைப் போட்டியில், சமசந்தர்ப்பம் இல்லாத மக்களுக்கும், விடுதலையும், சமத்துவமும் அளிப்பதற்காக என்று தோற்றுவிக்கப்பட்டது என்கிற உண்மை, யாவரும் அறிந்ததாகும். அப்படிப்பட்ட ,ஜஸ்டிஸ் கட்சியானது, இப்போது, நாளடைவில் செல்வந்தர்களான முதலாளிமார்கள், ஜமீந்தார்கள் ஆதிக்கத்திற்குள்ளாகி, அவர்களது நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், பெருக்கிக் கொள்ளவுமான வழிகளுக்கே பயன்படக் கூடிய மார்க்கங்களில் திருப்பப்பட்டு வருகின்றது என்ற விஷயம் பார்ப்பனரல்லாத மக்களில் பெரும்பான்மையோர் அறிந்ததாகும்.