பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பெரியாரும்‌ சமதர்மமும்‌

அன்றைய நிலையைத் துல்லியமாக மதிப்பிட்ட, ஈ.வெ. ராமசாமி, அக்கட்சியைச் சரியான வழிக்குக் கொண்டு வரலாமென்று நம்பினார். அவர் எழுதியதை இப்போது படிப்போம்.

‘ஆனாலும், அதை (ஜஸ்டிஸ் கட்சியைப் பழையபடி), தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மக்கள் விடுதலைக்கும், சமத்துவத்துக்கும் திருப்ப முடியாது என்று சொல்லி விடுவதற்கில்லை, என்பது இன்னமும் நம்முடைய கருத்தாகும்.

‘மக்கள் ஒரு கட்டுப்பாடாய் இருந்து, நெருக்குவார்களானால், அவர்கள் வழிக்கு வந்து, கட்சியின் உண்மை நோக்கத்திற்கு உழைக்க முன் வந்தாலும் வரலாம்.’

அக்காலத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், தாழ்த்தப்பட்டவர்களின் மேல் சுமத்தப் பட்டிருந்த இழிவையும், ஏழைகளின் மேல் திணிக்கப்பட்டிருந்த வறுமைக் கொடுமையையும் ஒருங்கே தூக்கியெறியத் துடித்தவர்கள், பிற கட்சிகளை விடப் பெரியாரின் கட்சியில்தான் ஏராளமாக இருந்தார்கள். அன்று சாதியொழிப்பிற்கு, நீதிக் கட்சியாளரிடையே இருந்த அளவு ஆதரவு கூட, தமிழ் நாட்டின் பிற அரசியல் கட்சிகளிடம் இல்லை. எனவே, ஈ.வெ. ராமசாமி முழு நம்பிக்கையோடு, ஈரோடு சுயமரியாதைச் சமதர்மத் திட்ட அடிப்படையில், நீதிக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு, ஒரு செயல் திட்டத்தை அனுப்பி வைத்தார். புரட்சிகரமான அத்திட்டம் என்ன சொல்லிற்று?

1. பொது மக்களின் சேவைக்கும், சௌகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திர சாதனங்கள், போக்கு வரவு சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படிச் செய்ய வேண்டும்.

2. உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் இடையே தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி, கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி அவற்றின் வழியாக விவசாயிகளின் துன்பங்களையும், சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அப்புறம்?