viii
‘வாழலாம்; எல்லோரும் வாழலாம்; அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற வாழலாம்; வாயடியும், கையடியும் மிகுந்த பேர்கள், இயற்கை வளத்தை தேவைக்கு மேல் முடக்கிப் போட்டுக் கொள்ளா விட்டால்’, இக்கருத்தைப் பயிரிட்டதில், பெரியாரின் பங்கு பெரிது; மிகப் பெரிது; ஆழமானது.
பெரியாரின் தொண்டு நீண்டது; பன்முகங் கொண்டது; புரட்சிகரமானது; பயன் கருதாதது; சோர்வு அறியாதது; எதிர் நீச்சல் தன்மையது.
அறுபதாண்டு காலம், பொதுத் தொண்டில் பல பக்க புரட்சிகரமான தொண்டில், தந்தை பெரியார் ராமசாமியைப் போல் வெற்றிகரமாக தாக்குப் பிடித்தவர் எவரே உளர்.
பெரியார் ராமசாமியை, தீவிர காங்கிரசுவாதியாக அறிந்தவர்கள் அநேகமாக மறைந்து விட்டார்கள் எனலாம். காந்தியடிகளின் தலைமையில், கதரைப் பரப்பிய ராமசாமி வரலாற்று நாயகராகி விட்டார். கள்ளுக்கடை மறியலை முதலில் தொடங்கிய பெருமைக்குரியவர் ராமசாமி என்பதும், அவரது மனைவி நாகம்மையும், தங்கை கண்ணம்மாவும் அம்மறியலில் பங்கு கொண்ட முதல் பெண்கள் என்பதும், சிலருக்கே நினைவுக்கு வரலாம். தீண்டாமை ஒழிப்புப் பணியின் ஒரு கூறாக, கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதும், இரு முறை சிறைக் கொடுமைக்கு ஆளானதும், அதிலும் நாகம்மையும், கண்ணம்மாவும் பங்கு பெற்றதும் வரலாற்றின் ஒளி விளக்குகள் ஆகும். சாதிக் கலைப்பிற்கு வழியாக, கலப்பு மணங்களை ஊக்குவித்த பெரியாரைக் காண்போர் பலராவர்.
வெண் தாடி வேந்தராகக் காட்சியளித்த தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன்; உயர் எண்ணங்கள் மலர்ந்த சோலை; பண்பின் உறைவிடம்; தன்மான உணர்வின் பேருருவம்; புரட்சியின் வற்றாத ஊற்று; தொண்டு செய்து பழுத்த பழம்: அச்சம் அறியா அரிமா ; எவர்க்கும், எத்தீங்கும் விளைவிக்காத மனிதாபிமானத்தின் பேராறு.
தந்தை பெரியார், இந்திய தேசிய காங்கிரசைத் தமிழ்நாட்டில் பரப்பிய நால்வரில் ஒருவர் என்பது ஒரு நிலை. அப்பணியைத் திட்டமிட்டு மறைத்தும், குறைத்தும் வந்தவர் ஒரு சாரார். அவரைத் தேசத் துரோகியாகக் காட்ட முயல்கின்றனர். சாதியொழிப்பு, தன்மானப் பயிர், தமிழ் உணர்வு, தமிழர் என்ற நினைப்பு ஆகியவற்றை வளாத்தவர் என்பது அடுத்த நிலை. பழைய இலக்கியங்கள், சமய நூல்கள் ஆகியவற்றைக் களையெடுத்து, பசுந்தாள் உரமாக்கியது அந்நிலையின் கூறாகும்.