96
பெரியாரும் சமதர்மமும்
பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
சமதர்மத்தின் இன்றியமையாத கூறு, இரண்டறக் கலந்த கூறு, எது? சாதி பற்றியோ, மதம் பற்றியோ எவருக்கும் சலுகை தராமை. இப்போதுள்ள சலுகைகள் பற்றிப் புழுங்குவோர், கூப்பாடு போடுவோர், எதிர்த்துப் போராடத் துடிப்போர், சமதர்மத்திற்குப் போராடினால், அப்போராட்டத்திற்குப் பொருள் உண்டு. இல்லாவிடில், சுரண்டல் கூட்டத்தின், பங்கு சண்டை என்ற அளவில்தான் அது முடியும். அது எல்லோரையும் வாழ்விக்கப் பயன்படாது.
‘மனிதன் ஆயிரங் காலத்துப் பயிர்’ என்பது உலக வழக்கு. தனி மனிதனுடைய வயது. அதிகம் போனால், நூறு ஆண்டுகள். மக்கள் இன வயது அதற்கு மேலும். மனிதர்கள் மறைந்த பிறகும், இனம் தொடரும்; பல்லாயிரம் ஆண்டுகள் தொடரும், இதை நினைவுபடுத்துவதே மேற்கூறிய வழக்கு. சரி, அது நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன?
நெம்பு கோல், தேரை நிலையிலிருந்து கிளப்பி விடலாம். அதே போல், சில தலைவர்களின் நெம்புதலால், தேங்கிக் கிடக்கும் சமுதாயம் நகரலாம். நகர்த்துவதற்கு உறுதியும், கூர்மையும் உடைய சிலர் போதுமானவர்களாக இருக்கலாம்.
நம்முடைய சமுதாயத்தின் தேவை என்ன? நகர்தல் அல்ல; தலைகீழான மாறுதலே. அத்தகைய மாறுதலும், ஒரோவேளை, பல முற்போக்காளர்களின் முயற்சியால் நிகழலாம். அது போதாது. அது நிலைத்து நிற்க வேண்டும். நிலையான தலைகீழ் மாற்றத்திற்கு வேர் எது? கல்வி அறிவு. அக்கல்வி அறிவின் உட்கரு எது? எழுத்தறிவு.
தன்னாட்சி இந்தியாவின் பெரியவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
’மந்திரத்தால் மாங்காய் விழும்’ என்பதை நம்பாத, காரண, காரியங்களின் தொடர்புகளை உணர்ந்த, பகுத்தறிவுப் பகலவனாகிய ஈ. வெ. ராமசாமி, அவை உருவாக என்னென்ன தேவை என்பதைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
சமதர்ம ஆட்சி முறைக்கு உயிர் நாடியான அறிவுக்கு வழி செய்வதையும், ஈ.வே ராமசாமி தமது திட்டத்தில் சேர்த்தார்.