பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

பெரியாரும்‌ சமதர்மமும்‌

திருத்தங்களோடு நீதிக்கட்சியின் அடுத்த மாநாட்டில் வைப்பதென்று அக்கூட்டம் ஒப்புக் கொண்டது. அது வெறும் கண் துடைப்பா? இல்லை. ஒப்புக் கொண்டபடியே, 1935ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில், தலைவர் பொப்பிலி, ஈ.வெ. ராமசாமியையும், மற்றவர்களையும் அழைத்துப் பேசினார். மூன்று நாள்கள் பேசிய பின், தீர்மானங்களை மாநில மாநாட்டிற்கு அனுப்பினார். அம்மாநாடு அவற்றை ஆலோசித்தது. மீண்டும் தனிக் குழுவொன்றிற்கு அனுப்பியது. அதுவும் காலங்கடத்தும் முயற்சியாகப் போய் விடவில்லை. அப்படித் தேங்க விடுவாரா பெரியார்?

தனிக் குழுவின் பரிந்துரைகளோடு அத்தீர்மானங்கள், அடுத்த நீதிக்கட்சி மாநில மாநாட்டில் வைக்கப்பட்டன; ஏற்றுக் கொள்ளப் பட்டன. ஆம்; சமதர்மத் திட்டம், நீதிக்கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது,

வேறு பக்கத்தின் போக்கு எப்படியிருந்தது?

இந்திய தேசியக் காங்கிரசு அபேதவாதிகள், சென்னையில் கூடிச், சமதர்மக் கொள்கையை முன்னிலைப் படுத்தி முடிவு செய்ததை, முன்னரே சுட்டிக் காட்டினேன். அத்தகையோர் உறங்கி விடவில்லை. அங்கும், இங்கும் மாநாடுகளைக் கூட்டினார்கள். சமதர்மக் கோட்பாட்டைப் பரப்பினார்கள். சமதர்மம் இல்லாத தன்னாட்சி உரிமை பயனற்றது என்று தெளிவு படுத்த முயன்றார்கள்.

22-10-1934இல் பம்பாயில் காங்கிரசு சமதர்ம மாநாடு நடந்தது. அம்மாநாடு,‘பூரண சுயேச்சை’ என்பதற்கு விளக்கம் தரும் ஓர் முடிவை மேற்கொண்டது. அம்முடிவைப் பார்ப்போம்.

‘உழைக்கும் பொதுமக்களின் கைக்கு ஆட்சியும், அதிகாரமும் வருவது என்பதாகப் பொருள் பட வேண்டும்.’ உழைக்கும் மக்களைச் செல்லாக் காசுகளாக்கவே, வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை என்னும் முறையை நம் தலைவர்கள் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டார்களோ?

உழைக்கும் மக்களுக்கு, எல்லா அதிகாரங்களையும் மாற்றி விட வேண்டுமென்று பறை சாற்றிய பம்பாய் மாநாடு, பொருளாதார விடுதலையே உயிர் நாடி என்று காட்டுகிறது.