பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீதிக்கட்சி ஏற்றது—காங்கீரசு மறுத்தது

101

எளிதில் மயக்கி விட முடியுமென்று அவர்கள் நினைக்கவில்லை போலும். எனவே, பல நிலைகளிலும், பல வட்டாரங்களிலும் ஆர்வமுடைய சமதர்மவாதிகளைக் காண முடிந்தது. சமதர்மக் காற்றின் விளைவுகளில் ஒரு பகுதி சமதர்மக் கவிதைகள்.

முன்னரே சுட்டிக் காட்டியபடி, தோழர் ஜீவானந்தம் கவிதைகள் ‘புரட்சி’யில், பின்னர் வந்த ‘பகுத்தறிவி’ல் வெளியாயின. ஏறத்தாழ, ஈராண்டுக் காலம் ஈ.வெ.ரா. வின் வார இதழ்களில் வாரந் தவறாது, அத்தகைய பாடல்கள் வெளியாயின.

தொழிலாளர் படும் துயரங்களை, அவற்றைப் போக்கும் வழியான சமதர்மப் பொருளியலின் சிறப்புகளை விளக்கும் அப்பாடல்கள், பிழைப்புக் கவிஞர்களால் பாடப்பட்டவையல்ல; கொள்கையின் கொப்பளிப்பில் பாடிய அக்கவிஞர்கள் பலராவர். அவர்களில் ஒருவராகிய கடம்பங்குளம் நாராயணன் என்பவரின் ‘ஏழைகள் முறையீடு’ என்ற பாடலில் ஒரு பகுதியை, உங்கள் முன் வைக்கத் தோன்றுகிறது.

“மாடிவீடு வேண்டாம்—படுக்க
மஞ்சம் மெத்தை வேண்டாம்
 ஓடக்கார் வேண்டாம்—தோழா!
உடமைபல வேண்டாம்
 பசிக்குணவு வேண்டும்—பாலர்
படிப்பிற்குதவ வேண்டும்
 நசிக்கும்வரை யுடலம்—தோழா!
நான் வினையாற்றுகிறேன்
 இந்த முறைதனக்கே உலகம்
இசையவில்லை யானால்
 எந்த முறை கொண்டும்—தோழா!
இயக்குதல் குற்றமையா!

பாட்டாளி அணியைச் சமதர்ம முன்னணியாக மாற்ற அக்காலத் தீவிரவாதிகள் கருதினார்கள்; முயன்றார்கள், நாம் இப்போது எந்தப் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறோம்?