சுயமரியாதைப் பணியா? சமதர்மப் பணியா?
107
நிற்கவில்லை. ‘கட்சிக்குத் தடையேயொழிய, கொள்கைக்குத் தடையில்லை’ என்று திறமையாகப் பெரியார் வாதிட்டுப் பார்த்தார். ஆனால், பலிக்கவில்லை. நாட்டின் ஆதிக்கப் பிற்போக்குச் சக்திகள், வெள்ளையர் காதைக் கடித்தபடி இருந்தன. சுயமரியாதை இயக்கத்தையும், தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வாழ்க்கையின் அடிப்படைத் துறைகளில், எதிர் நீச்சல் போடும்படி மக்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்த தன்மான இயக்கத்திற்கு, அடக்கு முறை நிலை ஓர் நெருக்கடியை உருவாக்கியது.
‘சமத்துவமும் தேவை; சமதர்மமும் தேவை. முடிந்தால், இரண்டிற்கும் பாடுபட வேண்டும். முடியா விட்டால்? அடக்கு முறைக்கு ஆளாகி, இயக்கத்தவர் பலர் சிறைக்குச் சென்று, தக்க சூழ்நிலைக்காகக் காத்துக் கொண்டிருக்கலாம். அத்தகைய சிறை வாழ்க்கை நம் மக்களுக்குத் தியாகமாகவும், வீரமாகவும் தோன்றலாம். அவ்வழியைப் பின்பற்றுவதா? அல்லது மாற்று வழியைப் பின்பற்றுவதா?’ இத்தகைய கேள்விகள் தன்மான இயக்கத்தவர் உரையாடல்களில் எழுந்தன.
மாற்று வழி எது? சுயமரியாதைப் பணியை மட்டும் தொடர்வது ஆகும்.
சமதர்மக் கொள்கையைப் பரப்புவதற்காகச் சிறை சென்று விட்டால், தீண்டாமையொழிப்பு, சாதியொழிப்பு, மூடநம்பிக்கையொழிப்பு ஆகிய சமுதாயச் சீரமைப்புப் பணியை எவர் செய்வர்?
‘புத்தருக்குப் பின் முதன் முதலாகப் பெரியாரின் இயக்கமே, இதில் முனைப்பாக ஈடுபட்டது; ஓரளவு வெற்றியும் கண்டு வருகிறது. இதே சூட்டில் பாடுபட்டால், சாதிக் கொடுமைகளை ஒழித்து விட முடியுமே! எல்லாவற்றையும் நாமே செய்தோம் என்று சொல்லிக் கொள்ளவோ, நாங்களும் வீரர்கள் என்று விளம்பரப் படுத்திக் கொள்ளவோ, சாதியொழிப்புப் பணிக்கு இடையூறு செய்து விட்டால், மீண்டும் அது முளைக்குமா? பரவுமா?’ இப்படி இயக்கத்தின் உயிர் நாடிகளாக இருந்த பலர் கேட்கத் தலைப்பட்டனர்.
இறுதியில், அப்போதைக்குச் சமத்துவப் பணியில் மட்டும், முழு மூச்சாக ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.