22. கட்டாய இந்தியைப் புகுத்தி
இராஜாஜி திசை திருப்பினார்
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை சமதர்மத் திட்டத்தில், இரு பெருங் கூறுகள் இருந்தன. முதற் கூறு, இந்நாட்டை மட்டும் பிடித்துள்ள—இந்நாட்டுச் சமயங்கள் அரும் பாடுபட்டுக் காத்து வரும் வருண பேதங்களை, அதாவது, சாதி முறையை ஒழிப்பது ஆகும். இரண்டாவது கூறு, உலக சமதர்ம இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும்.
அனைத்திந்திய அளவில் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறையால், பொதுஉடைமைக் கட்சி தடை செய்யப்பட்டது. அதே பொது உடைமைக் கொள்கையை, வேறு இயக்கத்தின் சார்பில் பரப்பி வந்த பெரியாரும், அவருடைய அண்ணார், தங்கை ஆகியோரும் சிறைத் தண்டனைக்கு ஆளானார்கள். அரசின் கெடுபிடி நடவடிக்கைகள் ஏற்படுத்திய நெருக்கடியால், பெரியாரின் இயக்கம் அப்போதைக்குச் சாதியொழிப்புப் பணியோடு நின்று விட முடிவு செய்தது.
அப்பணி வெற்றி பெற்றால், சமதர்மம் வெற்றி பெறுவதற்கு நெடுங்காலம் ஆகாது. இதைத் தொலைப் பார்வையுடைய பெரியார் உணர்ந்தார். அவரோடு நெருக்கமாயிருந்த, பிற்கால குத்தூசியார் குருசாமி, அஞ்சா நெஞ்சர் அழகிரிசாமி, அ. பொன்னம்பலனார் போன்றவர்கள் உணர்ந்தார்கள்.
தொலை நோக்கு நம்முடைய தனிச் சொத்து அல்லவே. நமக்குத் தெரிந்த அளவு, இராசகோபாலாச்சாரியாருக்கும் தெரிந்தது. சாதியொழிப்புப் பணி அவருடைய கூட்டத்திற்குப் பெருங்கேடு. அதே போலப் பொது உடைமைக் கோட்பாடும், அவர்களுக்குப் பெருங்கேடு. இரண்டையும் எதிர்த்து ஒழிப்பது எளிதானதல்ல என்று இராசகோபாலாச்சாரியாரின் நுண்ணறிவுக்குப் பட்டது வியப்பல்ல. அடுத்துக் கெடுப்பதற்காகவே, அபேத வாதத்தைத் தானே முன்னின்று அறிமுகப்படுத்திப் பார்த்தார்.