112
பெரியாரும் சமதர்மமும்
அதுவும் வெள்ளோட்டமே; சில ஆண்டுகளில் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும், கட்டாய இந்தி புகுத்தப்படும் என்றார். அது மிரட்டல். நுனிப்புல் மேய்வோர், இதை இந்தியாவின் மேல் கொண்ட பற்றாகக் கொள்வர். நாம் விருப்பு வெறுப்பின்றி ஆய்வோம்.
எதற்காக இந்தியைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்றார்? நாட்டின் ஒருமைப்பாட்டிற்குத் தேவையெனப்பட்டது. இந்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கு உதவுமென்று பறை சாற்றப்பட்டது.
நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்கக் கூடியவர்கள் எவர்? அய்யங்கார் குலத்து அஞ்சல் ஊழியர்களா? இந்திய அரசுப் பணியாளர்களா? அரசு வங்கி அலுவலர்களா? அவற்றில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களா? அரசியல் பெரியவர்களா? உள்ளூர் கொடி கட்டிகளா?
அரசியலிலும், அலுவல்களிலும் அனைத்திந்திய மட்டத்தில் தொண்டு செய்யக் கூடியவர்களே, ஒருமைப்பாட்டை வளர்க்கும் வாய்ப்பினையோ, சிதைக்கும் சூழலையோ பெற முடியும். அரசியலில் வேண்டுமானால், படிப்பு குறைவாக இருப்பதே, நல்ல ஆதாயமாக இருக்கலாம்.
இந்திய அரசு அலுவலகங்களில் சேர்வதற்கு, எந்த நிலை படிப்பாளிகளுக்கு அக்காலத்தில் வாய்ப்பு இருந்தது. மேல் மட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, வாய்ப்பு இருந்தது. அடுத்துப் பட்டம் பெற்றவர்களுக்கு, ஓரளவு இருந்தது. உயர்பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு? மிக மிகக் குறைவு. எட்டாவதோடு நின்று விட்டவர்களுக்கு? அக்காலத்தில் வாய்ப்பே இல்லை எனலாம்.
இந்நிலையில் ஒன்றை நினைவு படுத்த வேண்டும். அது என்ன? அன்று நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கி ஒன்றே ஒன்றுதான். அது ‘ஸ்டேட் பாங்க்’ என்றழைக்கப்படுவது ஆகும். அதன் கிளைகள் சிறு நகரங்களுக்குக் கூட எட்டவில்லை. இரயில்வேக்களை ஆங்கிலக் கம்பெனிகள் நடத்தின. ஆயுள் ஒப்பந்தக் கம்பெனிகள்? அக்காலத்தில் தனியார் துறையில் இருந்தன. பிற்காலத்தில் முளைத்துள்ள நாட்டுடைமைத் தொழிற்சாலைகள் 1937இல் இல்லை.