பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டாய இந்தியைப் புகுத்தி இராஜாஜி திசை திருப்பினார்

113

அப்படியென்றால், இந்திய அரசுப் பணிகள் எண்ணிக்கையில் மிகச் சொற்பம். அதற்குப் போக விரும்புவோர், பட்டப் படிப்பாவது படித்திருந்தால் சென்னை, நாகை போன்ற துறைமுக அலுவலகங்களில், அஞ்சல் நிலையங்களில் எழுத்தர்களாகலாம். இவர்களுக்கு இந்தி பேசும் பகுதிகளில், வேலை பார்க்க நேரிடுவது அருமையிலும் அருமை. ஆகவே, அவர்கள் ஒருமைப்பாட்டை வளர்க்க இயலாது.

அப்படியிருக்க, எட்டாவது வரை படித்து நின்றவர்கள், இந்திய அலுவலகங்களில் என்ன வேலை பெறக் கூடும். கடைநிலை ஊழியர் வேலைகள் கிடைக்கலாம். அத்தகையோர் எண்ணிக்கை, அன்று ஒரு சில நூற்றுக்கு மேல் ஏறாது. அவர்களும் இந்தி பேசும் பகுதிகளில் பணி புரியப் போவது அத்தி பூத்தது போலவே.

மேல் மட்டப் படிப்போ, பட்டப் படிப்போ பெற்றவர்கள் இந்தி தெரிந்து கொண்டால், எல்லோரும் இல்லாவிட்டாலும், சிலராவது அதைப் பயன்படுத்தி, ஒருமைப்பாட்டை வளர்க்க வாய்ப்புப் பெறுவார்கள்.

அன்றைய நிலையில், பதினோராவது வரையில் படித்தவர்கள் இந்தி தெரிந்து கொண்டிருந்தால், சூதாட்டம் போலவே இருக்கும். ஆறாவது வகுப்பு படிப்பவர்கள் இந்தியைக் கற்றுக் கொண்டால், அதைப் பயன்படுத்தி அன்று எந்த இந்திய அரசின் பணிக்குப் போயிருக்க முடியும்? எத்தனை முறை இந்தி மாநிலங்களுக்குச் செல்லக் கூடும்? எந்த அளவிற்கு, இந்தி மக்களோடு அளவளாவி ஒருமைப்பாட்டை வளர்த்திருக்க முடியும்? கடலிலே பெருங்காயம் கரைத்த அளவிற்கே பயன் கிட்டியிருக்கும்,

ஒருமைப்பாட்டை வளர்க்க இந்தி என்றிருந்தால், பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில், இந்தியை ஏன் கட்டாயப் பாடமாக்கவில்லை? மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை நம் இராசகோபாலச்சாரியாருக்கு மட்டும் ஏற்பட்டு விட்டதாக நம்பாதீர்கள். அத்தகைய பயனுக்காக, இந்தியைக் கட்டாயமாக்க விரும்பினால், அதை மேல் மட்டப் படிப்புக்குக் கட்டாயப்படுத்தி இருப்பார். குறைந்த அளவு உயர்நிலை வகுப்புகளில் கொண்டு வந்திருக்க வேண்டும். அதையும் விட்டு விட்டு, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம். ஆறாவது வகுப்பில், இந்தியில் போதிய மதிப்பெண் பெறா விட்டால் ஏழாவது வகுப்-

—8—