பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பெரியாரும்‌ சமதர்மமும்‌

கோட்டைத் தொடுவதற்கு முன்பே, தமிழர்கள் அதை எட்டிப் பிடித்து விடுவார்கள். தென்னகத்தில், எல்லார்க்கும், எல்லாம் கிடைக்கும். பெருவாழ்வு விரைந்து வரும்’ என்று எதிர்பார்த்தார்கள்.

அதிர்ச்சி கொண்டவர்கள், ‘பசுவை வெட்டுவதா? நாட்டைத் துண்டாடுவதா? துரோகம்; தேசத் துரோகம்; தடுப்போம், நாட்டைப் பிரிப்பதைத் தடுப்போம்,’ என்று ஆர்ப்பரித்தார்கள். ‘எலி வலை எலிகளுக்கே’ என்று கேலி செய்தவர்களும் உண்டு.

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியாரும், அவரைப் பின்பற்றுவோரும் குரல் எழுப்பிய போது கூட, ஜின்னாவோ, அவரைச் சேர்ந்தவர்களோ, பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி பேசவில்லை என்பதை நினைவில் கொண்டு மேற்செல்வோம்.

சென்னை மாகாண பொதுமக்களைத் தட்டி எழுப்பி, அவர்களின் உரிய பங்கிற்காகப் போராடி, ஆறாண்டு காலம் ஊழலற்ற ஆட்சி நடத்தி,தொடக்கக் கல்வி நீரோட்டத்திற்கு உதவிய நீதிக் கட்சி, தமிழர் கட்சியல்ல; அக்கட்சி, தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் ஆகிய நால்வருக்கும் உரியதாக இருந்தது. நான்கு மொழியினருக்கும் உரிய நீதிக் கட்சிக்குத் தந்தை பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவர் ‘தமிழர் தலைவர்’ என்ற நிலைக்கு மேல், வளர்ந்து விட்டார்; தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டார். அந்நிலையில், பெரியாரின் முந்திய இலட்சியம் வளர்ந்து விட்டது; ‘திராவிட நாடு, திராவிடருக்கே’ என்ற குறிக்கோளாக விரிந்து விட்டது.

தலைவரைச் சிறையில் விட்டு விட்டு, அவரது உருவத்தை மேடையிலிருத்தி, நடவடிக்கைகளை மேற்கொண்ட நீதிக் கட்சியின் மாகாண மாநாடு, அனைவரும் எழுந்து நிற்க, உலகறியக் கொடுத்த உறுதி என்ன? தலைவரின் வழி நின்று, அவரது இலட்சியம் நிறைவேற, அயராது உழைப்போம் உழைப்போம் என்பதே, பல்லாயிரவர் திரண்டு கொடுத்த உறுதி மொழியாகும்.

ஏற்கனவே, காங்கிரசு ஏற்றுக் கொள்ளாத சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை நீதிக் கட்சி, பொப்பிலி அரசர் தலைமையில் இயங்கிய போது, ஏற்றுக் கொண்டது. அத்திட்டத்தின் முதற் கூறு, வருணப் பிரிவுகளை—சாதி முறையை, ஏற்றுக் கொள்ளாமல், அதை ஓழிக்கப் பாடுபடுவதாகும். மற்றோர் கூறு, அனைத்துலகச் சமதர்ம