பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.

தமிழ்நாடா? திராவிடநாடா?

125

முறையாகிய உற்பத்திச் சாதனங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், வங்கிகள் ஆகியவற்றை மக்கள் உடைமையாக்குவதாகும்.

இத்தகைய திட்டத்தை, நீதிக் கட்சி உண்மையாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத்தான், அடுத்த வாய்ப்பில் பெரியாரையே, கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டது. அவரது குறிக்கோளை நிறைவேற்ற, அயராது பாடுபடுவதாக வாக்குறுதியும் தந்தது.

முப்பது கோடி மக்களைக் கொண்ட இந்தியாவைச் சமதர்ம வழிக்குப் பக்குவப்படுத்திக் கொண்டு வருவதைக் காட்டிலும், எளிதாகவும், விரைவாகவும் நான்கு கோடி பேர்களைக் கொண்ட சென்னை மாகாணத்தை ஆயத்தப் படுத்திவிடலாமென்று, பெரியாரும், அவரைப் பின்பற்றியவர்களும் நம்பினார்கள். அந்நம்பிக்கை, வெறும் அவாவில் எழுந்ததல்ல. அக்கால கட்டத்தில், அப்படி நம்புவதற்குச் சில காரணங்கள் இருந்தன. அவற்றைப் பார்ப்போம்.

அப்போதைய நிலையில், கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், பெரியாருடைய சாதிக் கலைப்பு, சமதர்மத் திட்டம், ஆகிய இரண்டிற்கும், நல்ல வரவேற்பு இருந்தது. இரு பகுதிகளிலும், பொதுமக்களுடைய நம்பிக்கைக்கும், மதிப்பிற்கும் உரியவர்களாக வாழ்ந்த பெரியவர்கள், பெரியாருக்கு வேண்டியவர்களாக விளங்கியது போலவே, அவரது கொள்கைக்கு ஆதரவோ, பரிவோ காட்டுபவர்களாக இருந்தார்கள். ஆநதிரா, கர்னாடகா பகுதிகளிலும் பெரியார் ஓரளவு அறிமுகமானவராக இருந்தார்.

தெரிந்த தலைவர், தியாகம் பல புரிந்த செல்வர், புதிய இலட்சியங்களுக்காகத் தொடர்ந்து தியாகம் புரியத் தயங்காத சிறைப் பறவை, அஞ்சாமையில் அரிமா, இப்படிச் சுடர் விட்ட தந்தை பெரியார், முன்னின்று நடத்தும் சமதர்மப் போராட்டம், தென்னகத்தைப் பொறுத்த மட்டில், வெற்றி பெறும் வாய்ப்பு இருந்ததாகத் தோன்றியது. தமிழ்நாட்டில், 150 சமதர்மச் சங்கங்கள் அமைக்க முடிந்ததே! திராவிட நாடு பிரிந்து விட்டால், சமதர்ம ஆட்சியை நிறுவுவது எளிதாகி விடும் என்று நம்பியதால், புது மழைக்குப் பின் தலை நீட்டும் பசும்புற்கள் போல், திராவிட நாட்டுக் கோரிக்கையைப் பெரியார் இயக்கத்தவர்கள் எழுச்சியோடு வரவேற்றார்கள். எந்த அளவிற்கு?