பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பெரியாரும்‌ சமதர்மமும்‌

சோவியத் கூட்டாட்சியோடு இணைந்து கொண்டார்கள். பிரிந்தவர் கூடினும், தனித் தனிக் கொடியோடு, சோவியத் ஒன்றியத்தில் வாழ்கிறார்கள்.

மாமேதை லெனின், பல்வேறு இனங்களுக்கு, சுய நிர்ணய உரிமை வழங்கியதும், சார் ஆட்சியில் அடிமைப்பட்டு, மொழியிழந்து வாழ்ந்த சில இனத்தவர், அவ்வுரிமையைப் பயன்படுத்தியதும், தென்னிந்தியாவில் உள்ள பலரிடையே ஒத்த உணர்வுகளைத் தூண்டியது. இந்தியாவிலிருந்து பிரிந்தால்தான், சாதிக் கொடுமையை, சாதி இழிவை ஒழிக்க முடியும்; சமதர்ம முறையை, சில ஆண்டுகளில் கொண்டு வர இயலும் என்ற மதிப்பீட்டில் எழுந்தது திராவிட நாட்டுக் கோரிக்கை. அது குருட்டுச் சிந்தாக முடிந்தது எதனால்?

எந்த ஒரு குறிக்கோளோ, கோட்பாடோ, திட்டமோ, அதன் உயர்ந்த தன்மையாலோ, அதனுள் பொதிந்துள்ள பெரும் தன்மையாலோ, அதுவாகவே, வெற்றி பெற்று விடாது. நீதிக்குத் துணையாக, வலிமை, வரும் போதே, அது வெற்றி பெற வாய்ப்பு உண்டு. சின்னஞ்சிறு நீதிக்கு, மாறுதலுக்குப் போராட, சிறு வலிமை போதும். பெரியதோர் நீதிக்கு, குறிக்கோளுக்குப் போராட, பெரும் வலிமை தேவை.

அய்ந்தாறு கோடி மக்களின் வருங்காலம் பற்றிய, கோட்பாடே, திராவிட நாடு பிரிவினை கோரிக்கையாகும். அது தென்னக மக்களின் வருங்கால அரசியலை மாற்றும்; பொருளியல் நிலையைத் தலை கீழாகப் புரட்டிப் போடும்; சமுதாயத்தில் நிலவி வந்த பிறவி ஏற்றத் தாழ்வு உணர்வுகளை உடைத்தெறியும் என்று கூறப்பட்டது. அதற்காகவே, நாட்டுப் பிரிவினை கேட்கப்பட்டது. இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை.

பொதுமக்களிடமிருந்து இதற்குப் போதிய ஆதரவும், தியாகமும் கிடைத்தனவா? இல்லை.

நிலக்கிழார்களும், வட்டிக் கடைக்காரர்களும், வணிகர்களும், பிற செல்வர்களும் சமதர்மம் வந்தால், குடி முழுகிப் போகுமென்று அஞ்சினார்கள். இது இயற்கை. எளிய மக்களும் மிரண்டார்கள். இப்போது கூட, பெட்டிக் கடைக்காரர்களும் வேலையற்ற பட்டதாரிகளுமே, நடைபாதை வாசிகளுமே, சமதர்மம் என்றால், மிரளும் போது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், அவர்கள் நிலை எப்படியிருந்திருக்குமென்று ஊகிக்கலாம்.