பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பெரியாரும்‌ சமதர்மமும்‌

புதிய பிரிவினைத் திட்டத்திற்குத் தேவையான அளவு சூடு பிடிக்காவிடினும் பழைமை விரும்பிகள், இப்போது உள்ள பொருளியல் முறையை—சாதி முறையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி திராவிட நாட்டை எதிர்ப்பது என்று முடிவுக்கு வந்தார்கள். எனவே, சமயப் பாதுகாப்பு, பண்பாட்டுப் பாதுகாப்பு என்னும் பெயரில் ஒரு கூட்டம் எதிர்த்தது. ‘நாட்டுப் பற்று’ என்ற பெயரால் ஒரு கூட்டம் எதிர்த்தது. கீரைக் கடைக்குப் போட்டிக் கடை வைக்கும் போக்கால், பலர் எதிர்த்து விளம்பரம் தேடினர். இத்தகைய காரணங்களால், திராவிட நாட்டுக் கோரிக்கை நிறைவேறுவதற்கு வேண்டிய போராட்ட வலிமை குவியவில்லை.

தனி நாடு பெற, கூட்ட வலிமை போதாது; நியாய அடுக்குப் போதாது; நாவன்மை போதாது என்பது புலனாயிற்று.

பெரியார் திராவிட நாடு கேட்ட பிறகும், சில ஆண்டுகள் வரை ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினை கேட்கவில்லை. இருந்தும் அக்கோரிக்கை வெற்றி பெற்றது. எதனால்? தலைவர் ஜின்னா சொல்லி விட்டால், கண்ணை மூடிக் கொண்டு எத்தகைய போராட்டத்திற்கும் குதிக்கக் கூடியவர்கள், போதிய எண்ணிக்கையில், அவர் பின்னால் இருந்தார்கள்; செயல் பட்டார்கள்.

பெரியார் அறிவுப் பூர்வமாக, எவ்வளவுதான் காந்திய முறைகளைக் கண்டித்தாலும், நடைமுறை என்று வரும் போது, காந்தியை மிஞ்சும் ‘சாத்வீகி’யாகவே நடந்து வந்தார்.

அவராலோ, அவரது இயக்கத்தாலே, எவருடைய உயிருக்கோ, உடைமைக்கோ, பொதுச் சொத்துக்கோ சிறிதளவு இழப்பும் ஏற்பட்டதில்லை என்பது பெரியாருக்குரிய தனிச் சிறப்பாகும். அச்சிறப்பு அவருக்குப் பின்னரும், தொடர்வதைக் காண்கிறோம்.

இருப்பினும், ஏதோ தொல்லைகளும், கொடுமைகளும், பெரியார் இயக்கத்தால் கட்டவிழ்த்து விடப் பட்டது போல, ‘மேலோர்’ அன்றும் அலறினார்கள்; இன்றும் அலறுகிறார்கள்; அத்தனையும் பொய் அழுகை.

இல்லையென்றால், மடியில் கனமிருப்பதால், வழியில் பயமேற்பட்டு, ஒப்பாரி வைத்துக் கொண்டே முன்னேறச் செய்யும் சூழ்ச்சியாக இருக்கலாம். மூவாயிரம் ஆண்டுகளாகப் பிறவி முதாளித்துவத்தால், பிறரைச் சுரண்டியதில் வாழ்வு வாழ்பவர்களுக்கு—சாதி ஆணவக் கனம் மடியில் இருப்பவர்களுக்கு எதைக் கண்டாலும் அச்சம் ஏற்படுவது இயற்கை.