பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிடநாடு கோயிக்கை

133

இவற்றையெல்லாம் கல்லூரி காணாத தந்தை பெரியாரும், அவரது இயக்கத்தவரும் தெளிவு படுத்தி, பொதுமக்கள் ஆதரவை திரட்ட முயன்றார்கள். இந்தி எதிர்ப்பு உணர்வைச் சாதகமாக்கி, திராவிட நாட்டுக் கொள்கையைப் பரப்ப முயன்றார்கள்.

அன்றையக் காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகிய ச. இராசகோபாலாச்சாரியார் ‘தமிழர்கள் மட்டுமே நாட்டை ஆளவாம் என்ற தைரியம் ராமசாமி (நாயக்கரு)க்கு இருக்கிறது. அதிலே தவறில்லை. அயர்லாந்து நம் மாகாணத்தில் 16இல் ஒரு பங்கு இருக்கிறது. டிவேலாரா சுயராஜ்யம் நடத்தவில்லையா? தைரியமிருந்தால் நடத்தலாம்’ என்று பேசினார். எப்போது, எங்கே, அப்படிப் பேசினார்?

1945ஆம் ஆண்டு மே 28ஆம் நாள், இராசகோபாலாச்சாரியார் அப்படிப் பேசினார்; சென்னை கோசுலே மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அப்படிப் பேசினார்.

அவரது சீடர்கள் முதலில் இருட்டடிப்பு செய்தார்கள்; பிறகு கிண்டல் செய்தார்கள்; பின்னர் எதிர்ப்பைக் கிளப்பி விட்டார்கள்; தூற்றலை வளர்த்து விட்டார்கள். அப்படியிருக்க, இராஜாஜி இப்படி ஆதரிக்க, எது காரணமாயிருந்தது?

இரண்டாம் உலகப் போரில், பெரியாரைச் சார்ந்தவர்கள், ஆங்கிலேயருக்கு ஆதரவாக இயங்கியது உண்மை. அது தலைவரின் தன்னலம் பற்றியல்ல; கட்சியினரின் தனிப்பட்ட நன்மைக்காக அல்ல. பின் எதனால்?

உலகப் போரில் இட்லர் வெற்றி பெற்றால், மனித குலம் முழுவதுமே அடிமைப்பட்டு விடும் என்பது பெரியாரின் மதிப்பீடு. எனவே, இட்லர் வெற்றி பெறுவதைத் தடுக்க வேண்டும் என்பது நோக்கம். பிந்தைய நிகழ்ச்சிகள், அம்மதிப்பீடும், நோக்கமும் சரியானவையென்று காட்டி விட்டன.

சோவியத் நாட்டோடு, அமைதி உடன்படிக்கை செய்து கொண்டிருந்த இட்லர், முன்னறிவிப்பின்றி திடீரென, மிக அதிகமான படை கொண்டு, சோவியத் நாட்டைத் தாக்கினான். அக்கடும் போர் நான்காண்டுகள் நீடித்தன. அக்காலத்தில், மற்றோர் சதித் திட்டம் அம்பலத்திற்கு வந்தது. அது என்ன?

சோவியத் நாட்டைப் பிடித்த பிறகு, இட்லரின் படைகள் பெர்சியா வழியாக, இந்தியாவைத் தாக்கி, அடிமைப்படுத்த வேண்டும் என்பது சதித் திட்டம்.