பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

பெரியாரும்‌ சமதர்மமும்‌

இட்லரின் குறிக்கோள், அய்ரோப்பாவை அடக்கி ஆள்வதோடு நிற்காது, அதற்கு அப்பாலும் பாயும் என்பதைப் பலருக்கும் முன்னதாகவே, பெரியார் உணர்ந்திருந்தார். எனவே பேராதரவுக்கு முன் வந்தார்; ஆர்வத்தோடு, ஆதரவு திரட்டினார். இதில் என்னக் குற்றங் காண முடியும்? மதிப்பீடும் தவறல்ல;நோக்கமும் நல்லதாக முடிந்தது.

1940இல் தந்தை பெரியாரை அழைத்து, சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்து நடத்தும்படி, அப்போதைய ஆளுநர் கோரினார். தனி நாட்டை உருவாக்கப் போராடிக் கொண்டிருந்த பெரியார், பதவி ஆசை கொள்ளவில்லை; முதல் அமைச்சராக மறுத்து விட்டார். இராசகோபாலாச்சாரியார் தலையிட்டு, பெரியார் முதல் அமைச்சரானால், தாம் ஆதரிப்பதாகக் கூறியும், மறுத்து விட்டார். பிறகு வைசிராய் பேசி, முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினார். பெரியார் இணங்கவில்லை.

மீண்டும் 1942இல் ஓர் முறை ஆளுநர், தந்தை பெரியாரை, முதல் அமைச்சராக வரும்படி அழைத்தார். அதையும் பெரியார் மறுத்து விட்டார். பிறகு வைசிராயே கேட்டார். அப்போதும், மறுத்து விட்டார். இப்படி பெருந் தியாகங்களைச் செய்த பெரியாரை ‘ஆங்கிலேயரின் பல்லக்குத் தூக்கி’ என்று பத்திரிகையுலகம் கட்டுப்பாடாக, உளமார்ந்த பொய்யைப் பரப்பிற்று; புரோகித உலகம் கயிறு திரித்தது; அரசியல்வாதிகள் அவதூறு செய்தனர்.

திராவிட இயக்கத்திற்கு எதிர்ப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழர்களைப் பிடித்து முன்னிறுத்தி, திராவிடநாடு கோரிக்கையை எதிர்க்கச் செய்தார்கள். சென்னை தொழில் அதிபர்கள், திராவிட நாடு கோரிக்கையைக் காட்டி தொழிற்சலுகை பெற்றார்கள்.

இன்றைக்கும் ‘மதவுரிமை அடக்கப்பட்ட சோவியத் நாட்டைக் கூட ஆதரித்தார்’ என்று விழாக்களில் மேடையேறி முழங்கும் பெரியவர்கள், அறிவாளிகளாகக் கருதப்படும் போது, அந்நாளில் பெரியாரின் பேரில், பொய்யான பழிகளைச் சுமத்தியது வியப்பல்ல.

‘விழுங்குணவை விழுங்குவதற்கும் உணர்ச்சியற்றார்’ என்று பாரதிதாசனால் இடித்துரைக்கப்பட்ட தமிழ் மக்கள், அப்பழிகளைச் சாக்காகச் சொல்லி, ஒதுங்கிப் போனது, சமதர்மப் பயிர் வளர்வதைத் தள்ளிப் போட்டது.

திராவிட நாடு கோரிக்கைக்குப் பின், கிளம்பிய பாகிஸ்தான் கோரிக்கை சூடு பிடித்ததைக் கண்டே, இராஜாஜி, ‘தைரியமிருந்தால் தமிழர்களே ஆளலா’மென்று ஆசை காட்டினார்.