26. தேர்தலில் நிற்காதீர்கள்
பட்டம் பதவிகளைக் கைவிடுங்கள்
அரசியலில் நிலையான நண்பர்களும் இல்லை; நிலையான பகைவர்களும் இல்லை! இது உண்மையான வழக்கு ஆகும்.
ஆங்கிலேயர்கள், நெடுந் தொலைவிலிருந்து வந்து, இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு, எவர், எவர் எப்போது பயன்பட்டார்களோ, அவர்களையெல்லாம் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். தேவைப்பட்டால், ஆதரிப்பவர்களைக் கை விட்டு விட்டு, பகைவர்களோடு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டார்கள்.
இந்திய அரசியல் விவகாரங்களில் மட்டுமா இப்படி நடந்து கொண்டார்கள்? இல்லை: பிற நாட்டுத் தொடர்புகளிலும் ‘உடுக்கை இழந்தவன் கை’ போல, நெருக்கடியில் உதவியவர்களை விட்டு விட்டதோடு, அவர்களை எதிர்ப்பவர்களுக்குத் துணையாகி விட்டார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு;
உலகின் முதல் சமதர்ம ஆட்சி, லெனின் தலைமையில், 1917இல் ஏற்பட்டது. இரஷ்யாவில் முளைத்த அம்முறையை, முளையிலேயே கிள்ளி எறிந்து விட, பிரிட்டன் உள்ளிட்ட பதினான்கு முதலாளித்துவ நாடுகள் முயன்றன; நான்கு ஆண்டுகள் போல், இரஷ்யாவைத் தாக்கி, அப்பரந்த நாட்டில் போரிட்டன; இறுதியில் தோற்றன.
இரண்டாவது உலகப் போர் சூடு பிடித்து, நீண்டு கொண்டிருந்த போது, சோவியத் ஆட்சியை அழிக்க முயன்ற பிரிட்டன், சோவியத் நாட்டோடு, கூட்டுறவும், ஒத்துழைப்பும் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆங்கிலேயர், அப்போதைக்காகிலும் பழைய பகையை மறக்க வேண்டியதாக இருந்த போது, சோவியத் நாட்டிற்கும், தோழமை வரவேற்கத் தக்கதாக இருந்தது. இவ்விரு நாடுகளும், அமெரிக்காவும் இணைந்து நின்றே, அப்போரின் பிற்பகுதியில் போரிட நேரிட்டது.