27. இந்திய விடுதலை:
பெரியாரின் கணிப்பு
27-8-1944-இல் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் தலைமையில் நடந்த சேலம் மாநாட்டில், அரசோடு ஒத்துழைப்பதில்லை என்று முடிவு எடுக்கப் பட்டதை முன்னர் கண்டோம். பட்டங்களையும், கௌரவப் பொறுப்புகளையும், விட்டு விட வேண்டுமென்பது அதன் கூறாக அமைந்தது. ‘இது பற்றிப் போதிய அறிவிப்பு இல்லை’ என்று சொல்லியவர்களுக்குப் போதிய காலம் கொடுப்பதற்காக, பத்தாயிரம் உறுப்பினர்களைச் சேர்த்த பின், தனி மாநாடு கூட்டி, மேற்படி முடிவுகளை உறுதிப்படுத்த, மாநாடு, ஒப்புக் கொண்டது.
அதன்படி உறுப்பினர்கள் சேர்ப்பதில், முனைப்பு காட்டப் பட்டது; எதிர்பார்த்த எண்ணிக்கையினர்களைச் சேர்க்க முடிந்தது. அதன் பிறகு, தனி மாநாடு கூட்டப் பட்டது. அது திராவிடர் கழகத்தின் பதினேழாவது மாநாடு ஆகும். அது எங்கே நடந்தது? திருச்சி, புத்தூர் திடலில் நடந்தது. பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையேற்றார். அம்மாநாட்டில், ஏற்றுக் கொண்ட ‘ஒத்துழையாமை’ முடிவு உறுதிப் படுத்தப் பட்டது.
திருச்சி மாநாட்டில், திராவிடர் கழகத்தின் இலட்சியமாக, பின் வருமாறு முடிவு செய்யப்பட்டது.
திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில் துறை, வாணிபம் ஆகியவற்றில் பூர்ண சுதந்தரமும், ஆதிக்கமும் பெற வேண்டும்.
அப்படி திராவிட நாடு ஏற்பட்டால், அதில் உள்ள மக்கள் எப்படி நடத்தப்படுவார்கள்? இக்கேள்விக்குப் பதிலாக, இரண்டாவது முடிவு அமைந்தது. அதைக் காண்போம்.
‘திராவிட நாட்டிலுள்ள மக்கள் யாவரும் சாதி, வகுப்பு, அவை சம்மந்தமான உயர்வு தாழ்வு, இல்லாமல், சமுதாயத்திலும், சம உரிமையும் சம சந்தர்ப்பமும் பெற்று சம வாழ்வு வாழச் செய்ய வேண்டும்.’