இந்திய விடுதலை: பெரியாரின் கணிப்பு
147
ஏற்கவில்லை. நான்கு நாட்களுக்கு ஒரு முறை, மருந்தை மாற்றிக் கொள்ளும் என்புருக்கி நோயாளியின் நிலைக்கு நம் சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது.
இந்தியா விடுதலை பெற்று, இமயத்திலும், மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சி ஏற்பட்டது.
சென்னை மாகாணத்திலும், காங்கிரசு ஆட்சி வந்தது. கட்டாய இந்திப் பாடமும் திரும்பி வந்தது.
இந்திய அரசியல் மேல்மட்ட வற்புறுத்தலின்படி, சென்னை மாகாணத்தில், ஓமந்தூர் ராமசாமியை முதல் அமைச்சராகவும், கோவை, தி. ச. அவினாசிலிங்கனாரை கல்வி அமைச்சராகவும் கொண்டிருந்த காங்கிரசு ஆட்சி, பழையபடி, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிற்று. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் இந்தி படித்து, தேர்ச்சி பெற வேண்டுமென்று ஆணையிட்டது.
அப்போதும், இந்தியை எதிர்ப்பதிலிருந்து, திராவிடர் கழகத்தை விடுவித்து விட்டுத் தாங்கள் பொறுப்பேற்கக் கூடிய பெரியவர்களோ, மக்கள் அமைப்புகளோ, இல்லை.
தமிழ் மக்கள் சாதாரண படிப்பு கூட பெற முடியாதபடி செய்யும், கட்டாய இந்திப் பாட முறையை ஒழிக்கும் பணிக்குத் திராவிடர் கழகம் திரும்ப நேரிட்டது. இன்றியமையாத இப்போரில் ஏற்பட்ட அக்கறை, சமதர்மப் பணியை ஓரளவு பின்னே தள்ளி விட்டது என்றால், மிகையல்ல.