பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைக்கால இந்திய அரசு

151

ஆயிற்றே டாக்டர் இராசன். அவருக்கு பி.&சி. தொழிலாளர் போராட்டம் சதியாகத் தோன்றிற்று; அப்புறம் அமைச்சரவை முத்திரை குத்தாமல் இருக்குமா?

வேலை நிறுத்தத்தை முறியடிக்க முனைந்தது. அன்றைய தொழிலாளர் தலைவர் தோழர் எஸ்.சி.சி. அந்தோணி (பிள்ளை)யை விசாரணையின்றிச் சிறையில் தள்ளியது. பின்னர் நாடு கடத்தியது.

தோழர் பக்கிரிசாமி (பிள்ளை), ஏழுமலை, முத்தையா போன்ற மற்ற தலைவர்கள் பலரையும் அப்படியே சிறைப்படுத்தியது. பிறகு போராட்டத்திற்குப் பொறுப்பேற்ற திரு. வி. கல்யாண சுந்தரனாரைத் தன் வீட்டை விட்டு அகலாதிருக்க, அடக்கு முறை ஆணையிட்டது.

சட்டப்படி, கொட்டி முழங்கி தன்னாட்சி பெற வேண்டிய 15-8-1947க்கு அய்ந்தாறு திங்களுக்கு முன்பே, சென்னை மாகாணத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்தப் பாணங்கள், பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியினர் மேலும், தொழிற்சங்கச் செயல் வீரர்கள் மேலும் விடப்பட்டன.

அவ்வளவோடு நின்றார்களா? இல்லை. வலிமை மிக்க இந்திய அரசு உள்நாட்டு அமைச்சர் வல்லபாய் படேலின் தூண்டுதலால், இந்தியத் தேசியத் தொழிற் சங்கம் (I.N.T.U.C) தோற்றுவிக்கப்பட்டது. அதன் வழியாக, இந்தியத் தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டனர்.

இத்தனையும் நடந்த பிறகும், வரப்போவது கெடுதலை அல்ல, விடுதலை என்று கருதியவர்கள் ஏராளம்.

செல்வர்களே காலத்தில் கனிந்து, தங்கள் சொத்தை அறக் கட்டளைகளாக்கி விட்டு, உழைத்து உண்பார்களென்று இன்றும் எண்ணற்றவர்கள் நம்புகிறார்களே! அதைப் போல், அன்றும் நம்பினார்கள்.

பெரியார் சென்னை பி.&.சி தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு தந்தார். சமதர்மக் கருத்துக்களைப் பரப்பிக் கொண்டே இருந்தார். அவரது ‘விடுதலை’ நாளிதழ் அடக்குமுறைக்கு ஆளானது. நன்னடத்தைப் பணம் கட்ட நேரிட்டது.