பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பெரியாரும்‌ சமதர்மமும்‌

ஈரோட்டுக்குக் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை ஈ.வெ.ராவுக்குரியதாகும். ஈரோட்டுக் கடைத் தெருவில், பல கடைக்காரர்கள், பொது நிலத்தை ஆக்கிரமித்து இருந்தார்கள். வேண்டியவர்களாயிற்றே என்று தயங்காமல், பகை வளருமே என்று அஞ்சாமல் உறுதியாக நின்று ஆக்கிரமிப்புகளை எடுக்கவைத்து தெருவை அகலப்படுத்திய அரிமா ஈ.வெ. ராமசாமி ஆவார்.

ஈரோட்டுச் சிங்கம்—ஈ. வெ. ராவின் தனிச்சிறப்புகள் சில. அவையாவன : உரிமைக்காகப் போராடும் தன்மை; பொதுநலப் போராட்டங்களுக்கரக எதையும் தியாகஞ் செய்ய முனையும் போக்கு, சலிப்பின்மை, இடையறாத உழைப்பு, அஞ்சாமை, இத்தனைக்கும் மணிமுடியாக- எல்லோரையும் மதிக்கும் பண்பு ஆகியவை.

உரிமைவேட்கை, பெரியாரோடு பிறந்தது. சமத்துவ உணர்வும் உடன் பிறந்ததே. இவ்விரண்டு நல்லுணர்வுகளும் ஈ.வெ.ரா.வுக்குப் புதிய புரட்சிகரமான கண்ணோட்டத்தைத் தந்தன. சிறுவனாக இருந்தபோதே சாதிக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள், பெரியவர்கள் கட்டளைக்கு மாறாக, எல்லாச் சாதியார் வீடுகளிலும் நீர் அருந்தவும் உணவு உண்ணவும் தலைப்பட்டார்.

உரிமைவேட்கை, ஈ. வெ. ராமசாமியைக் காங்கிரசில் சேர்த்தது. அப்போதையக் காங்கிரசு, காந்தியார் தலைமையில் இயங்கிற்று. அவர் தலைமையில் தான் அவ்வியக்கம் மக்கள் இயக்க மாகத் தழைக்கத் தொடங்கியது. ஈ.வெ.ராமசாமி ஏற்றுக்கொண்ட கொள்கைக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிடும் இயல்பினர். அவர் காங்கிரசுக் காரராக காந்தியத்தை ஏற்றுக்கொண்டார். உண்மையான காந்தியவாதியாக விளங்கினார்.

காந்தியார் காட்டிய ஒத்துழையாமையை விழிப்பாகக் கடைப் பிடித்தார். வழக்கு மன்றஞ் செல்ல மறுத்தார். கடன் பத்திரங் கள் மூலம் வரவேண்டிய ஐம்பதாயிரம் ரூபாய்களை இழக்க நேரிடு வதைப் பற்றியும் பொருட்படுத்தாது, வழக்காட மறுத்தார்.

மதுவிலக்கு காந்தியத் திட்டங்களில் ஒன்று. அதுவரையிலும் அதற்குப் பிறகும் மது அருந்தாதவர் ஈ. வெ. ராமசாமி. பெண்கள் கள்ளுக்கடை மறியலுக்கு வந்தது முதன் முதலாக ஈரோட்டில் தான் நிகழ்ந்தது.