158
பெரியாரும் சமதர்மமும்
‘எந்தத் தொகுதியிலாவது, பல வேட்பாளர்கள் நின்று, காங்கிரசிற்கு எதிரான ஒட்டுகளைச் சிதறடித்து, காங்கிரசு வேட்பாளர் வெல்ல வழி செய்து விடுவார்கள் போல் தோன்றினால், அங்கே, அதிக வெற்றி வாய்ப்புடைய காங்கிரசு கட்சியைச் சாராத வேறு கட்சிக்காரராயினும், அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யலாம்’. இத்தகைய வேண்டுகோளை விடுத்தார்.
தந்தை பெரியார், தமது நீண்ட, இணையற்ற, பொது வாழ்க்கைத் தொண்டில், தமது நாட்பட்ட விருப்பு, வெறுப்புகளை விளையாட விட்டது அரிது.
எவரை, எக்கட்சியை எதிர்த்தாலும், அது அவரது மதிப்பீட்டில், அந்நியர் அக்கட்சி பொது நன்மைக்குக் கேடாகச் செயல்பட்டார், செயல்படுகிறார், செயல்படுவார், என்ற முடிவு ஏற்படுவதால் மட்டுமே இருக்கும். அதே மனிதர், அதே கட்சி, பொது நன்மைக்குப் பயன்படும் என்று பட்டு விட்டால், முன்னர் எடுத்த நிலைக்கு நேர்மாறான நிலையை எடுப்பார்; ஆதரிப்பார்; துணை நிற்பார்.
சென்னை மாகாணத்தில், அய்க்கிய முன்னணி முளைத்த பருவத்தில், அப்போதைய இந்திய பொதுஉடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய தோழர் டாங்கே, தென்னாட்டிற்கு வந்தார். திருச்சியில், பெரியாரோடு கலந்துரையாடினார்; திருச்சியில் இருபதாயிரம் பேர்கள் கொண்ட பொதுக் கூட்டத்தில், தோழர் டாங்கே உரையாற்றினார்.
அப்போது, ‘கம்யூனிஸ்டுகள் காக்கை குருவிகளைப் போல, சுட்டுக் கொல்லப் பட்டதை—கொடுமைப்படுத்தப் பட்டதைப் பெரியாரும், அவரது இயக்கமும் வன்மையாகக் கண்டித்த அளவு, எவரும், எந்த இயக்கமும் கண்டிக்கவில்லை; பெரியார், கம்யூனிஸ்ட்டுகள் பால், காட்டிய அளவு பரிவையும், அவர்களுக்குக் கொடுத்த அளவு ஆதரவையும், இந்தியாவில் வேறு எவரும், எந்த இயக்கமும் கொடுக்கவில்லை’ என்னும் பொருள்பட, நாடறியப் பறை சாற்றினார்.
பின்னர் பம்பாயில் ஒரு பெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய தோழர் டாங்கே, தமது உரையில் ‘சென்னை மாகாணத்தில் செயல்படும் திராவிடர் கழகமும், பொது உடைமைக் கட்சியும் பொதுத் தேர்தலில் ஒத்துழைக்கப் போகிறது.