கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப் பட்டனர்
159
‘வேட்டையாடப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரியார் கொடுத்த அளவு, ஆதரவு, அடைக்கலம், வேறு எவரும் கொடுக்கவில்லை.
‘திராவிடர் கழகமும், பொது உடைமைக் கட்சியும், இலட்சிய ஒருமைப்பாடு உடையது.
‘திராவிடர் கழகம் சாதி வேற்றுமையற்ற சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுகிறது. அதோடு, சமதர்ம சமுதாயம் உருவாகவும் உழைக்கிறது.
‘இவ்விரண்டு இலட்சியங்களும், பொது உடைமைக் கட்சியின் குறிக்கோள்கள் ஆகும்.
‘நம் இரு சாராருக்கும் இடையே உள்ள சிறு கருத்து வேறுபாடு, ஒன்றே ஒன்றைப் பற்றித்தான். எது முதல், எது இரண்டாவது, என்பது பற்றியதாகும்.
‘பொருளாதார மாற்றத்திற்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோம். திராவிடர் கழகம் சமுதாய மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது. அவ்வளவுதான் மாறுபாடு’ என்று பொருள்படப் பேசினார்; பெரியாரையும், அவரது இயக்கத்தையும் பாராட்டி, நன்றிக் கடன் செலுத்தினார்.
பொதுத் தேர்தல் வந்தது. பெரியார், சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டார்; அய்க்கிய முன்னணிக்கு ஆதரவு திரட்டினார்.
குத்தூசி குருசாமியார், அன்றைய காங்கிரசு ஆட்சி நடைமுறைப்படுத்திய ‘ஆறு அவுன்ஸ்’ பங்கீட்டை வைத்து ‘ஆறு அவுன்ஸ் ஆட்சி’ என்று பெயர் சூட்டினார். பற்றாக்குறை பங்கீட்டால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மனதில், அது பதிந்து விட்டது. விளைவு?
1952இல் நடந்த பொதுத் தேர்தலில், சென்னை மாகாண சட்ட மன்றத்தின் பேரவையில் காங்கிரசு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கத் தவறிவிட்டது. மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஒட்டு மொத்தத்தில் பெரும்பான்மையினர் ஆனார்கள். ஆனால், அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி காங்கிரசாக இருந்தது. எனவே அதற்கு அமைச்சரவை அமைக்க வாய்ப்பு கிடைத்தது.