160
பெரியாரும் சமதர்மமும்
அப்போது காங்கிரசிலிருந்து விலகியிருந்த, என்றும் தேர்தல் களத்தில் நிற்காத, சக்ரவர்த்தி இராசகோபாலச்சாரியாரை அழைத்து முதல்வர் ஆக்கினால், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சிலர், ஆச்சாரியாருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற குறிப்பு கிடைத்தது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரசின் தலைவராக விளங்கிய காமராசர், ஆச்சாரியாரை அழைத்தார்; முதல் அமைச்சராக்கி மகிழ்ந்தார்; ஆதரித்து நின்றார்.
காமராசர் மட்டுமா அப்படிச் செய்தார்? பெரியாரும் ஆச்சாரியார் ஆட்சியை வரவேற்று எழுதினார். எதனால்?
ஆச்சாரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தியைத் தூது அனுப்பி, ஆதரவு கேட்டதற்குத் தாட்சணியப்பட்டு அல்ல. ஆச்சாரியார் ஆட்சி, நிர்வாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சிக்காரர்களும் தலையிடுவதைத் தடுக்கும் என்று நம்பியதால்; அவரது ஆட்சி நேர்மையாகவும், நாணயமாகவும் நடக்கும் என்று எதிர் பார்த்ததால்; ஆட்சிக்கு வந்து விட்ட ஆச்சாரியாரால், பார்ப்பனரல்லாதாருக்குக் கேடு வராதபடி பெருமளவு தடுக்கும் உபாயமாக ஆதரவு தந்தார்.
ச. இராசகோபாலாச்சாரியாரின் ஆட்சியினுடைய வரலாற்றைக் காட்டுவதற்கு முன், அன்றைய அனைத்திந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கே, திராவிடர் கழகத்திற்கும், தந்தை பெரியாருக்கும், நன்றிக் கடன் பட்டிருப்பதாகக் கூறியதற்குக் காரணத்தைப் பார்ப்போம்.
பொதுவுடைமைவாதிகளை வேட்டையாடியதை எதிர்த்து, பெரியார் போராடினார்; திராவிடர் கழகத் தலைவர் போராடினார்; ‘விடுதலை’ நாளிதழ் போராடியது; நாள் தோறும் போராடியது.
அதில் குத்தூசி குருசாமியார் ‘பலசரக்கு மூட்டை’ என்னும் தலைப்பில் ,ஒவ்வொரு நாளும் தனிக் கட்டுரை எழுதி வந்தார். ஈடு இணையற்ற துணிவோடும், கிண்டலோடும் நாள் தவறாது எழுத எப்படித்தான் முடிந்ததோ; அந்த அடக்கு முறை ஆண்டுகளில், அக்கட்டுரைகள் பொது உடைமையை ஆதரித்தே வரும்? பொது உடைமைக் கட்சியின் மேல் எடுத்த நடவடிக்கையைக் கிண்டல் செய்யும் பாணியில் வரும்.
சேலம் சிறையில், இருபத்து இரண்டு பேர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சில நாள்களில், கல்கத்தா செல்லும் இரயில் வண்டி