பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராஜாஜி மீண்டும் திசை திருப்பினார்

169

இந்தியாவில், பொதுத் துறையில், புதியதோர் எஃகாலை கட்ட, பிரதமர் நேரு விரும்பினார். அவருடைய தனிப்பட்ட பற்று எப்படியிருப்பினும், பொது மக்கள் மிரண்டு விடக் கூடாது என்பதற்காக, பிரதமர் நேரு முதலில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவ நாடுகளின் உதவியை நாடினார். உதவி கிடைக்கவில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள்?

‘தனியார் துறையில் எஃகாலை வைப்பதானால், எங்கள் முதலாளிகளை முதலீடு செய்ய விடுவதானால், புதிய எஃகாலைக்கு உதவுவோம்’ என்றார்கள்.

அயல் நாட்டார் ஆதாயத்திற்காக, இந்தியாவில் தொழில் தொடங்குவதானால், அவர்கள் உதவக் கூடுமென்றார்கள். நமக்கென்ன நன்மை? நம் உழைப்பாளிகளுக்குக் கூலி கிடைக்கும்; நம் பட்டதாரிகளுக்குப் பிழைப்பு கிடைக்கும்; நம் முதலாளிகள் சிலருக்கு இலாபத்தில் பங்கு கிடைக்கும்.

‘ஆலையில்லா ஊரில், இலுப்பப்பூ சர்க்கரை.’ வறியோர் செறிந்த இந்தியாவில், ஆயிரங் கோடிச் சொத்து, முதல் வரிசைச் சொத்து. பிற நாட்டு முதலாளிகளின் செல்வமோ, பல ஆயிரங் கோடி என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அந்நிலையில், நம் முதலாளிக்கு ஒரு பங்கு இலாபம் கிடைத்தால், அன்னிய முதலாளிகள் பத்து பங்கு எடுத்துக் கொண்டு போவார்கள். அதற்கு உடன்பட முடியுமா? அதுவும் மிக முக்கியமான எஃகு, பாதுகாப்புக் கருவிகள், ஆகியவற்றில் அயல் நாட்டுச் செல்வம் ஆதிக்கம் செலுத்துவது ஆபத்து. எனவே, பிரதமர் நேரு, வேறு பக்கம் திரும்ப நேர்ந்தது. சோவியத் நாட்டை நாட வேண்டிய நிலை உருவானது.

பொது உடைமைக் கட்சியைத் தடை செய்து, அடக்கி ஒடுக்கும் ஆட்சிக்கு, சோவியத் ஆட்சி உதவாது, என்று நினைத்திருக்கக் கூடும்.

அளவிற்கு மீறிய அடக்கு முறை, பொது மக்களிடையே காங்கிரசு ஆட்சியின் மேல் எதிர்ப்பை வளர்த்தது; பொது உடைமைக் கருத்தின் மேல் கவனத்தைத் திருப்பியது. அதே நேரத்தில், சோவியத் உதவியை நாடவும் நேர்ந்தது. இந்தக் ‘காலத்தின் கட்டாயங்கள்,’ ஆட்சியாளர், வேறு முறைகளைக்