172
பெரியாரும் சமதர்மமும்
யாது. இரண்டிற்கும் ஒரு ‘செட்’ ஆசிரியர்களே வேலை செய்ய வேண்டும். அதாவது, நாளைக்கு அய்ந்து மணிகள் வேலை செய்த நாட்டு புற ஆசிரியர்கள், புதிய திட்டத்தின் கீழ், ஆறு மணிகள் வேலை செய்ய வேண்டும்.
இத்திட்டம், திடீரென நடைமுறைப் படுத்தப்பட்டது. அது பற்றி, அன்றைய கல்வி அமைச்சருக்கோ, பிற அமைச்சர்களுக்கோ, அமைச்சரவைக்கோ, முன் கூட்டித் தெரியாது. கல்விச் செயலருக்கும் தெரியாது.
பள்ளிக்கூடக் கல்வியோடு தொடர்பே இல்லாத ஒருவரை, பொதுக் கல்வி இயக்குநராக்கி, அவரைக் கொண்டு, இப்படியொரு திட்டத்தைச் சுற்றறிக்கையாக அனுப்ப ஏற்பாடு செய்தார், முதல் அமைச்சர் இராஜாஜி.
இத்திட்டம் 1953ஆம் கல்வியாண்டிலிருந்து, நடைமுறைக்கு வந்தது. அது பற்றிய சுற்றறிக்கையைத் திடீரென செய்தித் தாள்களில் கண்ட அமைச்சர்களும், பெரிய அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.
“முதலமைச்சர் ஆணைப்படி நடந்தது. அவர்தான், இத்திட்டத்தை ஆலோசனையாக, ‘கோட்டை’க்கு அனுப்பாமல், நேரே ஆணையிட்டு விட்டு, தகவல் கொடு என்றார். அப்புறம் நான் என்ன செய்ய” என்று அன்றைய இயக்குநர், விளக்கஞ் சொல்ல நேர்ந்தது.
இராஜாஜி, இப்படியொரு திட்டத்தைக் காதும், காதும் வைத்தாற் போல், நடைமுறைப் படுத்தச் சொல்லுவானேன்?
இளமை, முற்போக்குச் சிந்தனைக்குப் பிறப்பிடம்; புரட்சிகரமான செயல்களுக்கு உந்துதல்.
முதுமை, தளர்வின் பருவம்; ஆற்றாமையின் விளை நிலம்; புதிய சிந்தனைகளைக் கண்டு மிரளும் காலம். தனது பழைய கருத்துகளைப் பற்றியே அச்சமும், அவநம்பிக்கையும் சுரக்கும் நிலை, முதுமை நிலையாகும்.
மக்களின் உள்ளங்களைக் கவர வேண்டிய நிலையில் இருந்த காலத்தில், கவர்ச்சிகரமான தீண்டாமையொழிப்பு, பேதமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றிற்காக, இராசகோபாலாச்சாரியார் வழக்காடினார். வயது ஏற ஏற, அறிந்தும், அறியாமலும் அந்நிலையிலிருந்து நழுவினார்.