பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராஜாஜி மீண்டும் திசை திருப்பினார்

173

1938ஆம் ஆண்டு, கீழ் வகுப்புகளுக்கு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது, இராஜாஜியின் இந்திப் பற்று உந்தியதால் அல்ல. ‘சமதர்மக் கோட்பாட்டை’ விரைந்து வளர்த்து வரும் தன்மான இயக்க வெள்ளத்தைத் திசை திருப்பி விட வேண்டும்; தென்னிந்திய சமதர்மக் கொள்கையினரும், வட இந்திய சமதர்மக் கொள்கையினரும் ஒன்று சேரவொட்டாதபடி, அவர்களுக்குள் வெறுப்பை வளர்த்து விட வேண்டும்.

இவை, காலந் தாழ்த்தாது நடக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. அதற்கேற்ற உபாயமாகவே, கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார். தமிழர்கள் கொதித்து எழுந்து போராடும் நிலைக்கு, அவர்களைத் தள்ளினார். இந்தி மொழிக்காரர்கள், தமிழர்களைப் பிறவிப் பகைவர்களாகக் கருதும் பாழ் நிலையை உருவாக்கி விட்டார். ஆனால், அவரே 1965இல் இந்தி எதிர்ப்புக்குத் தூண்டுகோலானார்.

அதே போல, ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கையை, ‘பசுவை வெட்டுவதா!’, ‘தாயைத் துண்டாடுவதா?’ என்று எதிர்த்து வந்த இராசகோபாலாச்சாரியார், பிறகு பாகிஸ்தான் பிரிந்து போவதை ஆதரிப்பதில் முன்னே நின்றார். அத்தகைய பிரிவினை, இரு நாட்டு மக்களிடையேயும் வாழையடி வாழையாகப் பகையை வளர்க்கும். அப்பகை உணர்ச்சி, இந்தியர்களின் சிந்தனையைச் சமதர்மத்திலிருந்து வேறு பக்கம் திருப்பி விடும் என்று, இராசகோபாலாச்சாரியாருக்குப் புலப்பட்டது ஆகவே, பிரிவினையை ஆதரித்தார்.

அதே உள்ளுணர்வுதான், குலக் கல்வித் திட்டம் என்னும் அணு குண்டை அவர் திடீரென வீசுவதற்குக் காரணம்.

கல்விக் கண் திறந்து, முன்னேற முயலும் நாட்டுப்புற மக்களின் பிள்ளைகள் பட்டங்கள் பெற்று, போட்டிக்கு வராதிருப்பதற்கு. குலக் கல்வி முறை உதவும் என்று நினைத்தார். அதோடு, பசுமையாக வளர்ந்து வரும் சமதர்மச் சிந்தனையை அழிக்கும் பூச்சியாக, கேடான இத்திட்டத்தைப் பயன்படுத்த நினைத்தார். இப்படியொரு திட்டம் வந்தால், தமிழர்களின் கவனம் அதை எதிர்ப்பதற்கே திரும்பி விடும். சமதர்மக் கொள்கையைப் பரப்ப, போதிய கவனமும், நேரமும், முயற்சியும் கிடைக்காது என்பது அவர் கணக்கு. எனவே, எந்த காமராசர் அழைத்து, முதல் அமைச்சர் ஆக்கினாரோ, அவருக்கும் சொல்லாமல், அரை வேளைப் படிப்பைத் திணித்தார்.